துர்கா பூஜை வழிபாட்டு மேற்கொள்ளும் ஹிந்துக்கள், தொழுகை நேரத்தில் பாட்டு போடுவது உள்ளிட்ட செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு வங்கதேச இடைக்கால அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இசைக் கருவிகள் மற்றும் ஒலி எழுப்பும் சாதனங்களை அணைத்து வைக்க பூஜை நடத்தும் குழுக்கள் ஏற்றுக் கொண்டதாக உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) எம்.டி ஜஹாங்கிர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், தொழுகை தொடங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னதாகவே ஒலி எழுப்பும் சாதனங்கள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும் துர்கா பூஜையை வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்களும் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
தற்போது வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்டு, ராணுவ உதவியுடன் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கோவில்கள் மீதும் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனிடையே, தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு இடங்களில் 32,666 சிலை வைத்து பந்தல்கள் அமைக்கப்பட்டு துர்கா பூஜை கொண்டாடப்படவுள்ளதாக ஜஹாங்கிர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும், பூஜை நடைபெறும் இடங்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், தடையின்றி விழா நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.