உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
2009ஆம் ஆண்டில் போர் நிறைவடைந்து ஒருவாரம் சென்ற பின்னர் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்குமாறு ஜே.வி.பி.யினராகிய நாம் பரிந்துரைத்தோம். இதற்கமைய ஆணைக்குழு அமைத்து, அவற்றின் பரிந்துரைகளை அமுலாக்கி இருந்தால், ஜெனிவாத் தீர்மானம் என ஒன்று வந்திருக்காது. இன்று அது தொடர்பில் கதைக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டிருக்காது.
எனவே,உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆணைக்குழுவின் பணியை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்படும். அதேபோல் சுயாதீன வழக்கறிஞர் அலுவலகமும் அமைக்கப்படும்.
போரை முடிவுக்கு கொண்டுவந்த படையினரையோ அல்லது வேறு எந்தவொரு இனக்குழுமத்தையோ இலக்கு வைத்து நாங்கள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. நல்லிணக்கத்தை உருவாக்கவும், மனித உரிமைகளை மேம்படுத்தவும், மீள நிகழாமையை உறுதிப்படுத்தவுமே இந்தத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும். சர்வதேச நியமங்கள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் வரும். நிகழ்நிலைக்காப்புச் சட்டமும் மறு சீரமைக்கப்படும்- என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.