ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜேர்மன் குடியரசுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துக்கொண்டு நேற்று காலை நாடு திரும்பினார்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் (Frank-Walter Steinmeier), ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜொஹான் வடேபுல் (Dr. Johann Wadephul) மற்றும் ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபாலி-ரடோவன் (Reem Alabali-Radovan) ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
அதன்போது, அரசாங்கத்தின் முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், டிஜிட்டல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் தொழில் சங்கங்களின் (Tourism and Travel Industry Associations) பிரதிநிதிகளுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.
ஜேர்மன் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையினால் அந்தச் சங்கத்தின் தலைமையகத்தில் (DIHK) ஏற்பாடு செய்யப்பட்ட வர்த்தக சந்திப்பிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அதில் சிறப்புரையும் நிகழ்த்தினார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜேர்மனியில் வாழும் இலங்கை சமூகத்தினரையும் சந்தித்தார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜிதஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.