ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக்கட்சி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை (16) வவுனியாவில் வைத்து குறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா , சிரேஷ்ட துணைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நிர்வாகச் செயலாளர் சேவியர் குலநாயகம் ஆகியோர் கூட்டிணைந்து யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து குறித்த விசேட அறிக்கையை நேற்று (14) தயாரித்துள்ளனர்.இதுகுறித்து கருத்து தெரிவித்த மாவை சேனாதிராஜா, “இலங்கைத் தமிழரசுக்கட்சி தற்போது ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒருவரான சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கட்சிக்குள் பல்வேறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுவதனால் நாம் எமது மக்களை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அதற்காகவே விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளோம்“ என தெரிவித்தார்.
இதேவேளை முன்னதாக, தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல்கள் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அறுவர் கொண்ட குழு கடந்த செவ்வாய்க்கிழமை (10) வவுனியாவில் கூடியிருந்தது.இதன்போது மத்தியகுழுக் கூட்டத்தினை ஒத்திவைத்ததோடு தென்னிலங்கை ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல்கள் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து அறிக்கையளிக்குமாறு சேனாதிராஜா மற்றும் சி.வி.கே. சிவஞானம் ஆகியோரிடம் பொறுப்பளிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த இருவரும் யாழில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் கூடி உள்ளடக்கப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக ஆய்வுகள் நடத்தப்பட்டதன் பின்னர் இறுதி அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.