வாட்டி விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்து மிக இலகுவாக 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
பங்களாதேஷுக்கு கடினமான 228 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த நியூஸிலாந்தின் பந்துவீச்சு இலக்கை நோக்கியதாக இருக்கவில்லை.நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் 16 வைட்கள் மூலம் 21 ஓட்டங்களை இனாமாகக் கொடுத்தனர்.
எனினும், அணித் தலைவி சொஃபி டிவைன், ப்றூக் ஹாலிடே ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ஜெஸ் கேர், லீ தஹுஹு ஆகியோர் பதிவு செய்த தலா 3 விக்கெட் குவியல்களும் நியூஸிலாந்தை வெற்றி அடையச் செய்தன. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ப்றூக் ஹாலிடே 69 ஓட்டங்களையும் சொஃபி டிவைன் 63 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 112 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அவர்களை விட சுசி பேட்ஸ் 29 ஓட்டங்களையும் மெடி க்றீன் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ரபியா கான் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 39.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து தோல்வியை அடைந்தது.
15 ஓவர்கள் நிறைவடைவதற்கு முன்னர் பங்களாதேஷ் 6 விக்கெட்களை இழந்து 33 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
ஆனால் மத்திய வரிசை விராங்கனைகள் பாஹிமா காத்துன் (34), நஹிடா அக்தர் (17), ரபியா கான் (25) ஆகிய மூவரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கி பங்களாதேஷுக்கு 125 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
உதிரிகளாக 30 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு கிடைத்தது. பந்துவீச்சில் ஜெஸ் கேர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லி தஹுஹு 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.