பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக படிக்காதவர்களே அதில் ரணில் விக்கிரமசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். எனவே இவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையையும் நீக்க முடியாது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் என்னுடன் மேடையில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர்.
நான் பலத்த காயங்களுக்கு உள்ளானேன். எவ்வாறிருப்பினும் ஜே.வி.பி.யின் அந்த கொடூர குண்டு தாக்குதலிலிருந்து நான் உயிர் பிழைத்துக் கொண்டேன்.
இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி. குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட போது நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றில் பல சம்பவங்கள் தொடர்பில் பட்டலந்த அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மாத்திரமின்றி அரச உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு முன்னதாகவே குண்டு தாக்குதல்களை ஜே.வி.பி.யே ஆரம்பித்தது. 15 வயதுக்கு குறைவான சிறுவர்களும், 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் நூற்றுக்கணக்கில் ஜே.வி.பி. கிளர்ச்சிகளில் உள்வாங்கப்பட்டிருந்தனர். கிளர்ச்சிக்கும் விடுதலைக்கான போராட்டத்துக்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது.
ஜே.வி.பி.யனரால் முன்னெடுக்கப்பட்டவை கிளர்ச்சிகளே தவிர, விடுதலைக்கான போராட்டங்கள் அல்ல. அன்றிலிருந்து இன்று வரை நாம் நாட்டில் அமைதிக்காகவே குரல் கொடுத்து வருகின்றோம். ஆனால் ஜே.வி.பி. ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் கைகளைக் காண்பித்து தாம் தப்பிக்க திட்டமிடுகிறது.
ஆனால் அவர் மீது இவ்வாறு எந்தவொரு குற்றச்சாட்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மாறாக அவர் சாட்சியாளராக மாத்திரமே அழைக்கப்பட்டிருக்கின்றார்.
வரலாறு தெரியாதவர்களால் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை நீக்குவது மாத்திரமல்ல, அவருக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாது.
சந்திரிகா பண்டாரநாயக்க குமாதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகளும், நல்லாட்சியின் போதும் பட்டலந்த அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி. எந்த சந்தர்ப்பத்திலும் பேசவில்லை. தற்போது அவர்கள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக இதனைக் கைகளில் எடுத்துள்ளனர் என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.