கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளதுடன், இது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான எஸ்.ரகுராம் எச்சரித்துள்ளார்.
ஒரு பதின்ம வயதுப் பெண் சரியாக முதிர்ச்சி அடையாமல், தனது தேவைகளை சரியாக அறிந்து கொள்ளாமல், கல்வியறிவு போதியளவு இல்லாமலும் இருக்கலாம்.
இவ்வாறான சூழ்நிலையில் கர்ப்பத்தை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஆயத்தப்படுத்தும் தன்மை போதாமல் இருக்கிறது.
இது குறித்த பெண்ணுக்கு உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்
பதின்ம வயதுடைய தாய்க்கு குருதிச்சோகை, உயர் குருதி அழுத்தம், நீரிழிவு போன்றன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.
குழந்தையை சரியான விதத்தில் கவனிக்காத பட்சத்தில் அந்த குழந்தை நிறை குறைவாக பிறக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளதுடன் அந்த குழந்தைக்கு பின்னாளில் சில சில பிரச்சினைகளும் ஏற்படலாம்.
பதின்ம வயது பெண்கள் திருமணமாகியோ அல்லது திருமணம் ஆகாமலோ இருக்கும்போது குழந்தைக்காக அவர்கள் முயற்சிப்பதை தடுக்க முடியாது.
தற்போது இலங்கையை பொறுத்தவரையில் குடும்ப சுகாதார நல மாது என்பவர் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றார்.
அவர்களை அணுகுவது மிகவும் இலகுவானது. ஒவ்வொரு இடங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் தாராளமாக உள்ளனர். அவர்களிடம் ஆலோசனைகளை பெற முடியும்.
ஆகவே இந்த பதின்ம வயது கர்ப்பம் என்பது தாய்மார்களிடத்தும், பெண்களிடத்தும், சமூகத்திலும் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதுகுறித்து சரியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.