“திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? இனிமேலும், உங்களுடைய நாடகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள்” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 13 கிராமங்களிலிருந்து 5,100 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் கையகப்படுத்தப்பட உள்ளதால் அந்த கிராமத்தை மையமாக வைத்து 910-வது நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
போராடும் பொதுமக்களுக்கு ஆதரவாக விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தீர்மானம் நிறைவேற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து போராடும் மக்களை சந்திக்கவும் முடிவு செய்தார். அதற்கான காவல்துறை அனுமதி பெறப்பட்டு, இன்று (ஜன.20) பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 13 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தவெக தலைவர் விஜய் பொடவூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: கிட்டத்தட்ட ஒரு 910 நாட்களுக்கு மேல், உங்களுடைய மண்ணுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். “இந்தப் போராட்டம் குறித்து ராகுல் என்று சிறுவன் பேசியதை நான் கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு என் மனதை ஏதோ செய்துவிட்டது. உடனடியாக உங்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. உங்கள் அனைவருடனும் பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது. உங்கள் அனைவருடனும் நான் தொடர்ந்து நிற்பேன் என்று சொல்லணும் என்று தோன்றியது.
ஒவ்வொரு வீட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள்தான். அதேபோல், நமது நாட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள், உங்களைப் போன்ற விவசாயிகள்தான். அதனால், உங்களைப் போன்ற விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான், என்னுடைய பயணத்தை தொடங்க வேண்டும் என்ற ஒரு முடிவோடுதான் இருந்தேன். அதற்கு சரியான இடம் இதுதான் என்று எனக்குத் தோன்றியது.
என்னை உங்கள் வீட்டில் இருக்கிற ஒரு மகனாக, என்னுடைய கள அரசியல், உங்களின் ஆசீர்வாதத்தோடு, இங்கிருந்துதான் தொடங்குகிறது. தவெக முதல் மாநில மாநாட்டில் நமது கட்சியின் கொள்கைகளை எல்லாம் எடுத்துக் கூறினேன். அதில் ஒன்றுதான் இயற்கை வளப்பாதுகாப்பு. சூழலியல் மற்றும் காலநிலை நெடுக்கடியை எதிர்கொள்ளக்கூடிய, இயற்கைக்கு ஊறு விளைவிக்காத, பகுதிசார் மாநில வளர்ச்சி பரவலாக்கம், இதுதான் தவெக அறிவித்த அந்த கொள்கை. இதை இங்கு நான் சொல்வதற்கு காரணம், வாக்கு அரசியலுக்காக அல்ல.
அதேபோல், அந்த மாநில மாநாட்டில் விவசாய நிலங்கள் பாதுகாப்பு கொள்கை தீர்மானம் குறித்து பேசினேன். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரபரப்பளவில் 13 நீர்நிலைகளை அழித்து சென்னையை நிரந்தரமாக வெள்ளக்காடாக்கும் இந்த திட்டத்தை மத்திய,மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். மேலும், இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், விவசாயிகள் பாதிக்கப்படும் இந்த திட்டத்துக்கு எதிராக, சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று கூறியிருந்தோம். அதை இங்கு உங்கள் முன்பாக மிகவும் உறுதியாக வலியுறுத்துகிறேன் என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.