இலங்கையில் உள்ள 35 இலட்சம் இளம் தலைமுறையினரில் 71 வீதமானோரே பாடசாலைக்கு செல்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் (Global School-Based Student Health Survey – 2024) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”நாட்டில் 35 இலட்சம் இளம் தலைமுறையினர் உள்ளனர். இவர்களில் 29 சதவீதமான 1,000,015 பேர் கல்வியை இடைநிறுத்தியுள்ளதுடன் 71 வீதமானோரே பாடசாலைக்கு செல்கின்றனர்.
கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 08 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.7 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை அருந்துவதுடன் இவர்களில் பெரும்பாலானோர் ஆண் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் 28 வீத மாணவர்கள் நாளாந்தம் சீனி கலந்த பானங்களை அருந்துவதுடன் 28.5 வீத மாணவர்கள் உப்பு கலந்த சிற்றுண்டிகளை பெற்றுக் கொள்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தவிர 29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன் 40.9 வீத மாணவர்கள் நாளாந்தம் அதிக சீனி கலந்த உணவுகளை உட்கொள்கின்றனர்.
ஆண், பெண் மற்றும் வயதுக்கமைய ஒரு சிகரெட் அல்லது இரண்டு சிகரெட்களை பயன்படுத்திய அல்லது பயன்படுத்த முயற்சித்த மாணவர்களின் எண்ணிக்கை 12.8 வீதமாக பதிவாகியுள்ளது.
இந்த சுகாதார ஆய்வறிக்கையானது சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் ஹன்சக விஜய முனி (Hansaka Wijemuni) தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்கேற்புடன் குடும்ப சுகாதாரப் பணியக கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.