இப்ப நல்லதுக்கு காலமில்லை. ஆனால் தட்டிச் சுத்துறவைதான் வசதியா வாழ்ந்து கொண்டிருக்கினம். அப்பிடியே ஊரையே அடிச்சு உலையில் போடக்கூடிய பெரும் 'எவிச்சோலுகள்' நிறையப்பேர் எங்களுக்குள்ள வரத் தொடங்கிட்டினம். ஆனால் அவையும் கனகாலத்துக்கு நிண்டு பிடிக்கமுடியாது. அதாலதான் அவையள் ஏதோ ஒரு விதத்தில் அம்பிட்டபடியே இருக்கினம். அப்பிடிக் கிட்டடியில் அம்பிட்டவர் ஒரு கள்ள டாக்குத்தர். ஆளுக்கும் மெடிசினுக்கும் 'மெக்கா' அளவு தூரம். ஆனால் எங்கையோ ஆரையோ பிடிச்சு, டாக்குத்தர்மார் பாவிக்கிற மாதிரி ஒரு ஐடெண்டி கார்ட்டை செய்துபோட்டு, அதைவைச்சு பேஸ்புக்கிலையும், வட்ஸப்பிலையும் வெளிநாட்டுக்காரரை வளைச்சுக்குத்தி, கோடிக்கணக்கில காசைக் கறந்திருக்கிறார் இந்தக் கள்ளடாக்குத்தர்.
'என்னட்ட மூண்டு கோடி ரூபா காசு இருக்கு. ஆனால் அந்தக்காசை எனக்காக சேர்க்கேலை. எனக்குத் தேவையுமில்லை. இஞ்சயுள்ள ஏழைச்சனத்துக்கு ஒரு ஹொஸ்பிட்டல் கட்டி இலவசமா நல்ல மெடிசின் குடுக்கோணும். அதுதான் என்ற கனவு. அதில நீங்களும் சேர்ந்தால் உங்களுக்கும் புண்ணியம் வந்துசேரும். இதால எனக்கு ஒரு ஆதாயமுமில்லை. தேவையெண்டால், உங்கட காசை பிறகு திருப்பியும் தரலாம்' எண்டுதான் உந்தக் கள்ள டாக்குத்தர் முதலில தூண்டிலைப் போடுவார். அதுக்கு ஆதாரமா தன்ற பேர்ல நிலையான வைப்பில மூண்டு கோடி இருக்கிற வங்கி உறுதிப்பத்திரத்தையும் காட்டுவார். ஆனால் அதுவும் செட்டப் ஆவணம் எண்டு விளங்காத, எங்கட சனத்துக்கு ஏதும் செய்யவேணும் எண்ட ஆர்வத்தில் இருக்கிற ஆக்கள் இந்தக் கள்ள டாக்குத்தருக்கு காசைக் கொட்டியிருக்கினம்.
இந்த 2024 ஆம் ஆண்டில மட்டும் ஆளின்ர எக்கவுண்டுக்கு 6 கோடி ரூபா வந்திருக்கு. ஆனால் உந்தச் சுத்தல்காரன் பிடிபடேக்க, எக்கவுண்டில 3 கோடி ரூபாதான் இருந்திருக்கு, இந்த அஞ்சு மாதத்துக்க ஆள் 5 கோடியைச் சிலவழிச்சிருக்கு. ஆத்தில வாற தண்ணிதானே, அண்ணை குடி, தம்பி குடி எண்ட கணக்கில காசை விசுக்கித் தள்ளியிருக்கிறார் உந்தக்கள்ள டாக்குத்தர். ஆள் பொலிஸிட்ட மாட்டுப்படேக்க அவரின்ர கையில ஏழரைப் பவுண் நகை. 5 போன், ஒண்டரைக்கோடி ரூபா பெறுமதியான பெரிய கார், கைச்செலவுக்கு வைச்சிருந்த காசு எண்டதெல்லாம் இருந்ததாம். அவர் கைச்செலவுக்கு எவ்வளவு வைச்சிருந்திருப்பார் எண்டு சொல்லுங்கோ பாப்பம்? அஞ்சு லட்சமாம். கைச்செலவுக்கே அஞ்சு லட்சம் எண்டால், பெருஞ்செலவுக்கு எப்பிடிக் காசை அள்ளி இறைச்சிருப்பார் எண்டு நினைச்சுப் பாருங்கோவன். வெளிநாட்டில இருக்கிறவைக்கு தானொரு டாக்குத்தர் எண்டு நம்பப்பண்ணுறதுக்காக, சுன்னாகத்தில ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து. அங்க கிளினிக் நடக்குது எண்டு போர்ட் எல்லாம் போட்டவராம். பிறகு அந்த வீட்டையும் ஆள் ஆட்டையைப் போடப் பாத்திருக்குது. நல்லகாலமா பொலிஸ் பிடிச்சதால அந்த வீடு தப்பிட்டுதாம். இதைவிட வேற சில காணியளையும், உருட்டிப் பிரட்டி கள்ள உறுதியள் முடிச்சும் கள்ள டாக்குத்தர் வித்திருக்கிறார். டாக்குத்தர் வேலையைவிட மற்ற எல்லா வேலையளையும் ஆள் செய்திருக்கு போல. டாக்குத்தர் வேலை தெரிஞ்சாத்தானே செய்ய?
அதைவிட தானொரு டாக்குத்தர் எண்டு அவர் செய்து வைச்சிருந்த 'ஐடெண்டி கார்ட்' பாக்கவே அது டுப்ளிகேட் எண்டு வடிவாத் தெரியுது. ஆரோ புதிசா கொம்பியூட்டர் பழகின ஆள், செய்யத் தெரியாமல் செய்த அந்த ஐடெண்டி கார்ட்டையே கண்டுபிடிக்க ஏலாமல், கோடிக்கணக்கில காசைக் குடுத்திட்டு, பேந்து 'ஏமாத்திட்டான்' எண்டு, அழுகிறவையிலதான் முழுப்பிழை. முதல்ல ஒருத்தன் உதவி கேட்டால் அவன் சரியான ஆளோ எண்டு ஒண்டுக்கு பத்துத்தரம் செக் பண்ணிப்போட்டு குடுங்கோ. இல்லாட்டி உங்கட தலையில ஏறி எல்லாரும் மிளகாய் அரைச்சுப் போட்டு போடுவினம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.