'ஆத்தில போற தண்ணிதானே, அண்ணன் குடி தம்பி குடி'எண்ட கதையா பொதுவேலையளில் ஆரும் கேள்வி கேக்கமாட்டினம் எண்ட தைரியத்தில காசை அடிக்கிறது இஞ்ச வழமையாப் போட்டுது. அதுவும் றோட்டுப்போடுற ஆக்கள் இதில பெரும் விண்ணர். ஒரு றோட்டுக்கு ஒப்பந்தம் எடுத்திட்டு அந்தக்காசிலையே பத்துப்பதினைஞ்சுறோட்டைப் போட்டிட்டு, கணக்கைக் காட்டிற சூரர் எல்லாம் இஞ்ச இருக்கினம். அவ்வளவு ஏன், றோட்டே போடாமலும் போட்டிட்டம் எண்டு அலுவல் பார்த் தவையும் இருக்கத்தான் செய்யினம். ஆனால் எல்லா இடத்திலையும் உந்தப்பருப்பு வேகாது. சனம் கொஞ்சம் உரத்துக் கேள்வி கேட்டால்,அந்தப் பயத்திலயாவது றோட்டைக் கொஞ்சம் ஒழுங்காப் போடப்பாப்பினம்.
இப்ப உலகவங்கியின்ர காசில சில றோட்டுகள். ஒழுங்கையளைத்திருத்துற வேலையள் நடக்குது. அதில ஒண்டு பண்டத்தரிப்பு, வடலியடைப்பிலை இருக்கிற ஆஸ்பத்திரி வீதி. மூண்டு மாசத்துக்கு முதல் தொடங்கின இந்த றோட்டு வேலை இப்ப முடிஞ்சு. தாரும் ஊத்தி. அதுக்கு மேல மண்ணையும் போட்டாச்சு. இனியென்ன றோட்டைத் திறக்க வேண்டியதுதான். ஆனாலும் இந்த றோட்டில அங்கத்தை ஊர்ப்பெடியளுக்கு ஒரு சந்தேகம். எதுக்கும் ஒருக்காச் சோதிச்சுப் பாப்பமெண்டு, றோட்டுக்கு மேல சும்மா கையை விட்டுப்பார்த்தால், படைபடையா மண்ணோட சேர்ந்து தாரும் வந்திருக்கு. கொப்பியில ஒட்டின ஸ்ரிக்கரைக்கூட கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் உரிக்க வேணும். ஆனால் உந்த தார்றோட் அப்பிடிக் கஷ்டப்படுத்தாமல் சும்மாவே கழண்டு வரத் தொடங்க. பெடியள் குழம்பிட்டாங்கள். அதோட உள்ளுக்க கல்லும் ஒழுங்காப் பரவேலை. கண்ட கண்ட கல்லையெல்லாம் ஏதோ ஒப்புக்கு போட்டு சமப்படுத்திப் போட்டும் தாராலையும். மண்ணாலையும் பூசி மெழுகிப் போட்டினம். இதைப்பற்றி ஊர்ப்பெடியள் பேஸ்புக். யூரியூப்களீல பத்த வைச்ச பிறகு எல்லாரையும் கூப்பிட்டு ஒரு மீட்டிங் வைச்சவையாம். அதிலையும் எல்லாருக்கும் முன்னால றோட்டு எப்பிடிக் கிளம்பது எண்டு பெடியள் ஒரு 'டெமோ காட்ட, றோட்டுப் போடுற துக்குப் பொறுப்பானவைக்கு முகம் கறுத்துப் போட்டது. அந்த றோட்டை நல்லபடியா போட்டுத் தாறம் எண்டு சொல்லியிருக்கினமாம். ஆனால் அது நடந்தபிறகுதான் உண்மை.
ஏனெண்டால், சனங்கள் கொஞ்சநாளில இந்த றோட்டு விசயத்தை மறந்திரும் எண்டு அவையள் நினைப்பினம். அப்பிடிக் கன இடங்களில் 'நல்லாப் போட்டுத்தாறம்' எண்டு சொல்லிப் போட்டு போனவை இண்டைவரைக்கும் எட்டியும் பாக்கேலை எண்டு சனங்கள் சொல்லுதுகள். அதேகதை வடலியடைப்பு ஆஸ்பத்திரி றோட்டுக்கும் வரக்கூடாது. இப்பிடி அவை 'ஸ்ரிக்கர் றோட்டை'போட்டதுக்குப் பதிலா சாணியால மெழுகியிருந்தால் கூட கொஞ்சநாளைக்கு நிண்டு பிடிச்சிருக்கும். இப்பிடி ஊர்வேலையில் வாற காசை அடிச்சு உலைவைக்க நினைக்கிறவை இருக்கும் மட்டும் நாடு எப்பிடி முன்னேறும்?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.