காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுறது தான் அரசியல்வாதியளின்ர கெட்டித்தனம். அதுக்கு முதலில எந்தப் பக்கம் காத்தடிக்குது எண்டு தெரிய வேணும். என்னதான் உருட்டுப்பிரட்டில எங்கட அமுல்பேபி அரசியல்வாதி கெட்டிக்காரன் எண்டாலும், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில ஆற்றை பக்கம் காத்தடிக்கும் எண்டு தெரியாமல் குழம்பிக் கொண்டு நிண்டவர். சஜித் வரேக்க அவரோட ஒட்டிக்கொண்டு திரிஞ்சார். பிறகு ரணில் வரேக்க அவரோடையும் பின்னாலையும் முன்னாலையும் இழுபட்டார். இப்பிடி கொழும்பில இருந்து வாற எல்லா அரசியல்வாதி மாரோடையும் அவர் பின்னுக்கு திரியிறதைப் பார்த்து சனத்துக்கே குழப்பமாப் போட்டுது. கடைசியில, சொப்பன சுந்தரியை ஆர் இப்ப வைச்சிருக்கிறது? எண்ட கேள்விக்கு விடை கிடைச்ச மாதிரி, அமுல்பேபியும் ஆருக்கு சப்போர்ட் பண் ணுறார் எண்டது தெரியவந்திட்டுது. இப்ப காத்தடிக்கிறது ரணிலாருக்குத்தானே? அதால அந்தப் பக்கம் அமுல்பேபி சாய்ஞ்சிட்டார். நல்ல காலத்துக்கு அவரின்ர கட்சியும் ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சு கிடக்கிறதால அமுல்பேபியை 'ஏன் இப்பிடி ஒரு முடிவு?' எண்டு கேக்கவும் ஆருமில்லை.
ஆனால், இப்பிடி ரணிலாரின்ர பக்கமா அமுல் பேபி சாய்ஞ்சதுக்கு பின்னால ஒரு டீல் ஓடியிருக்கு எண்டு, அவரின்ர கட்சியில இருந்த தயாசிறி ஜயசேகர மாவனல்லையில முந்தநாள் நடந்த எலக்சன் பரப்புரைக் கூட்டத்தில பகிரங்கமாச் சொல்லியிருக்கிறார்.
'நான் யாழ்ப்பாணம் வரேக்க, எனக்குத்தான் நீங்கள் சப்போர்ட் எண்டதை பப்ளிக்கில அறிவிக்கோணும். இல்லாட்டி உங்களுக்கு தந்த பார்லை சென்ஸ் எல்லாத்தையும் பிடுங்கிப் போடுவன்' எண்டு ஜனாதிபதி சொன்னதால தான் சஜித்தை விட்டிட்டு ரணிலாரின்ர பக்கம் ஓடிப்போய் அமுல் பேபி ஒட்டிட்டார் எண்டதுதான் தயாசிறி சொன்னதின் சாராம்சம். எலக்சன் காலத்தில இப்பிடியெல்லாம் எதிர்க்கன்னைக்குப் போறவையைப் பற்றி கதைக்கிறது சகஜம் தான். ஆனால் அமுல் பேபியைப் பற்றி யாழ்ப்பாணத்தில இப்பிடிக் கதைச்சால் அதை வைச்சு கொஞ்ச வாக்குகளை சஜித் அணி பொறுக்கலாம். ஆனால் அமுல்பேபிக்கு சம்பந்தமில்லாத மாவனல்லையில போய் அவரைப் பற்றி அவதூறு சொல்லவேண்டிய அவசியம் தயாசிறிக்கு இல்லைத் தானே.
தயாசிறி இப்பிடி விசயத்தைப் போட்டுடைக்க முதலேயே சாடைமாடையா அமுல்பேபியாருக்கு பார்லைசென்ஸ் குடுபட்டது பற்றி கதையள் வந்ததுதான். ஆனால் பினாமிப் பெயருகளில் அந்த லைசென்ஸை ஆள் எடுத்ததால அதை ஆராலையும் உறுதிப்படுத்திச் சொல்லேலாமல் போட்டுது. இப்ப பாம்பின்ர காலை அறிஞ்ச இன்னொரு பாம்பு விசத்துக்குப் பதிலா விசயத்தைக் கக்கிப்போட்டுது. இப்பிடி பார்லைசென்ஸை வாங்கிக் குவிச்சு. எங்கட யாழ்ப்பாணத்துப் பெடியளை பியருக்குள்ளையும், சாராயத்துக் கையும் குளிக்க வாக்கிறதுதான் அமுல் பேபியின்ர பாழாப் போன நனவு போல...
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.