டீஜே' பார்ட்டி அடிதடி பார்ட்டியா யாழ்ப்பாணக் கம்பஸில மாறினதைப் பற்றி அண்டைக்குப் பார்த்தானாங்களெல்லோ. ஆனால் அந்த அடிதடி பார்ட்டியோட முடிஞ்சு போகேலை. விட்டகுறை தொட்ட குறையா அது பிறகும் தொடர்ந்திருக்குது. பார்ட்டியில நாலாம் வருசக்காரருக்கும் மூண்டாம் வருசக்காரருக்கும் தான் சண்டை மூண்டது. பிறகு அது திசைமாறி மூண்டாம் வருசக்காரருக்குள்ளேயே சுன்னை பிரிஞ்சு அடிபடத் தொடங்கிட்டினம். மூண்டாம் வருசக்காரரில் ஒரு குரூப்புக்கு வெளியாக்களை அடிபாட்டுக்காக கூப்பிட்டது பிடிக்கேலை. அதோட கம்பஸெண்டால் சனத்திட்ட இருக்கிற மரியாதையைக் காப்பாத்தவேணும் எண்டு மற்ற ஆக்களோட கதைச்சிருக்கிறாங்கள். ஆனால் மற்ற குருப் இந்தக் கதையெல்லாம் கேக்க ரெடியில்லை. நல்லதுக்கு கதைச்ச பெடியளை நீங்கள் தான் எங்களை மாட்டிவிட்டிட் டீங்கள், பைணல் இயரோட சேர்ந்து எங்களுக்கு துரோகம் செய்யிறீங்கள்" எண்டு கொழுவல் எடுத்து. அது கடும் சண்டையாகி ஒரு பெடியனுக்கு கைமுறியிற அளவுக்கு அடிச்சிருக்கினம். அப்பிடி அடிச்ச நாலு பேருக்கு இப்பதற்காலிக வகுப்புத் தடை போட்டிருக்கு.
இப்பிடி கம்பஸ் எந்தநாளும் ரணகளமா இருக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்ன எண்டு அங்க படிக்கிறவையையும், படிப்பிக்கிறவையையும் கேட்டால் அவை ஒரேயொரு இடத்தைத்தான் காட்டுகினம். அந்த இடம் பரமேஸ்வரன் கோயிலுக்கும். பொங்கு தமிழ் பலகைக்கும் நடுவில இருக்கிற ஸ்டோன் பெஞ்ச் தான் (கல்லாசனம்). அந்தக் கல்லாசனத்துக்கு நிறைய நல்ல நினைவுகள் இருக்குத்தான். ஆனால் இப்ப அதில இருக்கிறவை அந்தக் கல்லாசனத்தை 'கள்ளா சனமா' மாத்திப்போட்டினம். எப்ப பார்த்தாலும் குடிச்சுப்போட்டு வந்து, அதால போற வாற பொம்பிளைப் பிள்ளையளுக்கு நக்கல் அடிக்கிறதுக்கும், பெடியளோட தனகிறதுக்கும் தான் அந்தக் கல்லாசனத்தில் இருக்கினம். பின்னேரம் சூரியன் கொஞ்சம் சரியத் தொடங்க, அந்தக் கல்லாசனத்துக்கு கிட்ட ஓட்டோக்களும் வரத்தொடங்கிடும். இட்டோக்களில இருந்து பியர் ரின்களும், போத்தில்களும் எடுத்து அந்தக் கல்லாசனத்தில வைச்சே பப்ளிக்கா குடிப்பினமாம். சிலவேளை ஆக்களுக்கு நல்லா ஏறினால் பியர்ரின், போத்தில் எல்லாம் அந்தக் கல்லாசனத்தோட போட்டிட்டு போடுவினம். வேலை வெட்டி இல்லாமல், உந்தக் கல்லாசனத்தில் இருந்து நான் ஆரோட கொழுவலாம் ? எந்தப் பிள்ளைக்கு நக்கலடிக்கலாம்? எண்டு யோசிக்கிறவை. அண்டைக்கு நடந்த சண்டைக்குப் பிறகு, அந்தக்கல்லாசனத்தையும் காணேலை. அடிபட்ட குருப் ஒண்டு அதையும் அடிச்சு நொருக்கிப் போட்டுது எண்டு கதை.
வழக்கமா இவ்வளவு நாளும் பெடி, பெட்டையள் இருந்து கதைக்கவெண்டு செய்த கல்லாசனம் இல்லாமல் போட்டுதெண்டால் கவலைதானே வர வேணும். ஆனால் ஏதோ நரகாசுரன் செந்தமாதிரி கனபிள்ளையள் அந்தக் கல்லாசனம் காணாமல் போனதைக் கொண்டாடுகினம். அந்தளவுக்கு அவைக்கு கல்லாசனத்தில இருக்கிறவை தொல்லை குடுத்திருக்கினம். கம்பஸ் மானத்தையும் வாங்கி இருக்கினம். இனிமேல் அந்தக் கல்லாசனத்தைக் கட்டுறதெண்டால் கோயிலுக்கும், பொங்குதமிழ் பலகைக்கும் அவமானத்தை உண்டாக்காமல் வேற எங்கையாவது மூலைக்குள்ள கட்டவேணும் எண்டது கம்பஸுக்கு உண்மையாவே படிச்சு முன்னேற்றத்துக்காக போனவையின்ர கோரிக்கை. அதை கம்பஸ் நிர்வாகம் கொஞ்சம் காதுகுடுத்துக் கேட்டால் நல்லது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.