புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசை 2024 இல் எப்போது என்றும் அதன் சிறப்புகள் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.
அம்மாவாசை சிறப்புகள் ;
வருடத்தில் 12 அம்மாவாசை திதிகள் வந்தாலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பாக கூறப்படுகிறது .வருடம் முழுவதும் வரும் அமாவாசை விரதங்களை மேற்கொள்ள முடியாதவர்கள் இந்த மூன்று அமாவாசை திதிகளை கடைபிடித்து வந்தாலே அதன் முழு பலனையும் பெறலாம் என்று கூறப்படுகிறது.
நம் முன்னோர்கள் ஆடி அமாவாசையின் போது பித்ருலோகத்தில் இருந்து கிளம்பி பூமியை நோக்கி பயணப்படுவார்கள், அப்படி புறப்பட்டு ஆவணி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் வரும் பிரதமை திதிக்கு பூமிக்கு வருவார்கள். பிறகு வரும் 15 நாட்கள் பூமியிலேயே தங்கி மஹாளய அமாவாசை முடிந்து மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்படுவார்கள் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.
நம் அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஆத்ம சக்திகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.மேலும் அமாவாசை தினத்தில் தான் சந்திரன் மகிழ்ச்சி அடைவார். அதனால்தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாளாக அமாவாசை கூறப்படுகிறது.
மஹாளய அமாவாசை 2024 இல் எப்போது?
இந்த வருடம் அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை மஹாளய அமாவாசை வழிபடப்படுகின்றது. அன்றைய தினம் முன்னோர்களை வரவேற்கும் விதமாக தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும். இதில் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தது எள்ளும் தண்ணீரும் இறைப்பதாகும், இது எளிமையான தர்ப்பணம் கொடுக்கும் முறையும் கூட.
தர்ப்பணம் கொடுக்க அன்றைய தினம் காலை 6 மணியிலிருந்து 1 மணி வரை தர்ப்பணம் கொடுத்துக் கொள்ளலாம். ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்த்துக் கொள்ளவும். புனித நதிக்கரைகள் மற்றும் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாக கூறப்படுகிறது.
யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம் ?
தாய் அல்லது தந்தையை இழந்த ஆண்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். கணவனை இழந்த பெண்களும் தர்ப்பணம் கொடுக்கலாம். சுமங்கலி பெண்கள் விரதம் இருக்கவோ ,தர்ப்பணம் கொடுக்கவோ கூடாது. அன்று வீட்டு வாசலில் கோலம் போட கூடாது.
பித்ருலோகத்தில் இருந்து வரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அவர்கள் பசியை போக்குவதோடு மட்டுமல்லாமல் பசியோடு இருக்கும் ஏழை எளியோருக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம்முடைய பல தலைமுறைகளுக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகிறது .
அது மட்டுமல்லாமல் வஸ்திர தானம், தண்ணீர் தானம், பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குவது போன்ற தானங்களை செய்வதும் சிறப்பாகும். மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று இரண்டு நெய் தீபம் ஏற்றி உங்கள் வழிபாட்டை முடித்துக் கொள்ளலாம்.
பலன்கள்;
எடுத்த காரியம் வெற்றி ,தடைகள் அகலும் ,வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும் .நம்முடைய மூதாதையர்களின் அருள் ஆசி நம்மை காக்கும் கவசமாகும். அவர்களின் ஆசீர்வாதம் இருந்தாலே எத்தகைய தடைகளையும் தாண்டி வெற்றி அடையலாம் .
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களையே பித்ருக்கள் என்கிறோம். அவர்களின் ஆத்மா சாந்தி அடையாமல் இருப்பதையே பித்ரு தோஷம் ஆகும். பித்ருக்களின் சாபம் என்பது கடவுள் நமக்கு அளிக்கும் வரங்களை கூட தடுத்து நிறுத்தும் சக்தி உடையது என்றும் கூறப்படுகிறது.
குழந்தை பிறப்பு தள்ளிச் செல்வது, தீராத நோய் ,திருமணத்தடை, காரியத்தடை போன்றவற்றிற்கு பித்ரு தோஷமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
எனவே வரவிருக்கும் இந்த மஹாளய அமாவாசையை தவறவிடாமல் நம் முன்னோர்களை வரவேற்று தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் நமக்கு மட்டுமல்லாமல் நம் தலைமுறையினருக்கும் அவர்களின் ஆசி கிடைக்கும் . [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.