போராட்டம் எனும் காலக்கடமை!
போராட்டம் எனும் காலக்கடமை!

இன்று சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினம். இறுதிப்போரின் போதும் அதற்கு முன்னரும் காணாம லாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், அவர்களுக்கு நீதி தேடியும் தமிழர் தாயகத்தின் பல பகுதிகளிலும் இன்றையதினம் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி தமிழர் தாயகம் வீதிக்கு இறங்குவது இதுவொன்றும் முதல்முறையல்ல. ஆனால், இந்த வருடத்தில் இடம்பெறும் காணாமலாக்கப்பட்டோர்தின போராட்டங்கள் சந்தர்ப்பவாதங்களாலும், காலப்பின்னணியாலும் மிகக் கனதியானவை என்றால் அதில் இரண்டாம் கருத்தில்லை.

ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையால் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரு வருட அவகாசம் இந்த ஓகஸ்ட்டுடன் முற்றுப்பெறுகின்றது. ஆதலால், செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தின் பின்னர் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், அவகாசக் காலத்தில் இலங்கை அரசாங்கம் காட்டிய முன்னேற்றங்கள் மற்றும் அடைவுமட்டங்கள் தொடர்பில் சர்வதேசம் நிச்சயம் பரிசீலிக்கும். இவ்வாறானதொரு பின்னணியில், எமது பிரச்சினைகள் இன்றளவும் தீர்க்கப்படாமலேயே உள்ளன என்பதை பட்டவர்த்தனப்படுத்துவதற்கு இன்றைய நாளில் இடம்பெறும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டங்களை நாம் முடிந்தளவுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன், ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தலுக்கான பரபரப்புகள் தற்போது தீவிரம் பெற்றுள்ள நிலையில் ‘எமது பிரச்சினை அதுவல்ல' என்பதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் இன்றைய போராட்டங்கள் எம்முன் விரிகின்றன.

ஐம்பதல்ல, நூறல்ல சுமார் மூவாயிரம் நாள்களாக தமிழர் தாயகம் காணாமலாக்கப்பட்டோருக்கான போராட்டங்களை எத்தனையோ தடங்கல்கள் 'அச்சுறுத்தல்கள்' இடையூறுகளைத் தாண்டி முன்னெடுத்த போதிலும், நீதியென்பது இன்னும் எட்டாக்கனி நிலைதான். போர் முடிவுக்கு வந்து 15 வருடங்களைக் கடந்துவிட்ட போதிலும், காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீடு, இறப்புச் சான்றிதழ்கள் என்பனதான் சிறீலங்கா அரசாங்கம் முன்வைத்த உச்சபட்சத் தீர்வுகளாக உள்ளன. இவற்றைத் தவிர வேறெந்த நகர்வையும் சிறீலங்கா அரசாங்கம் காணாமலாக்கப்பட்டவர்கள் விடயத்தில் கிஞ்சித்தும் முன்நகர்த்தவில்லை. அதற்குரிய ஆத்மார்த்தமான விருப்பம்கூட கொழும்புக்கு இல்லை. காணாமலாக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் மூவாயிரம் நாள்களாக விடுக்கப்பட்ட எந்தக் கோரிக்கைகளும் இலங்கையின் நீதிக்கட்டமைப்பை அசைக்கவில்லை. அரசின் இரும்பு இதயத்தை இளகச் செய்யவில்லை. ஆதலால் தற்போது எம் முன்னுள்ளஒரே தெரிவு 'போராட்டத்தைத் தீவிரப்படுத்தல் 'தான். இப்படியொரு நிலையில் தான் இன்றைய விடியலை எதிர்கொள்கின்றது தமிழர் தாயகம்.

போரில் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கான நீதிக் கட்டமைப்பு, நிலைமாறுகால நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தனது பிடியை இறுக்க வேண்டுமாயின் இதுபோன்ற வாய்ப்புகளை நாம் மீதமில்லாமல் பயன்படுத்த வேண்டும். காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி வழங்கப்பட்டு விட்டது போல் ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஓ.எம்.பி. அலுவலகத்தை மையப்படுத்தி பல கபடத்தனங்களை கொழும்பு நகர்த்தி வரும் நிலையில் இன்றைய நாளின் முக்கியத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

காலக்கடமைகளை நிறை வேற்றவிடாத பட்சத்தில், அதை 'வரலாற்றுத் தவறு' என்பர். அவ்வளவு இலகுவில் திருத்தியெழுத இயலாத தவறுகள் தான் வரலாற்றுத் தவறுகளாகின்றன.

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

313 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.