சென்னையில் உள்ள ஒரு அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் குழந்தைகள் நலக் குழு சார்பில் முறைப்பாடு ஒன்று சில தினங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. அதில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை ஒரு கும்பல் பணத்துக்காக சமூகவலைத்தளங்களில் விற்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பேரில் மகளிர் பொலிஸார் விசாரணையை தொடங்கினர். அதற்கமைய பொலிஸாரின் சந்தேக பிடியில் ஒருவர் சிக்கினார்.
பொலிஸார் அவரிடம் விசாரித்தபோது, தன்னுடைய மனைவி மூலம் பெற்ற மகளையே பணத்துக்காக பாலியல் தொழிலில் தள்ளியதோடு அதை ரகசியமாக வீடியோவாக எடுத்து விற்ற தகவலைத் தெரிவித்தார். அதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார், அவரின் கைப்பேசிகளை ஆய்வு செய்தனர். அந்த நபர் குறிப்பிட்டப்படி சிறுமிகளுடன் சிலர் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து அந்த நபரையும் மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய அவரின் மனைவியையும் பொலிஸார் கைது செய்தனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமியின் அப்பா, மகளின் ஆபாச வீடியோக்களை சமூகவலைதளங்களில் சிலருக்கு இரகசியமாக விற்றிருக்கிறார். அந்த வீடியோக்களை யார், யார் வாங்கினார்கள் என்ற விபரத்தை சைபர் க்ரைம் பொலிஸாரின் உதவியோடு மகளிர் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் சிறுமியிடம் இருந்த இரண்டு பேரை பொலிஸார் பிடித்து அவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட சிறுமியை மீட்ட பொலிஸார் அவருக்கு கவுன்சலிங் அளித்ததோடு மருத்துவ சிகிச்சையையும் அளித்து வருகிறார்கள். சிறுமி விவகாரம் என்பதால் இந்த வழக்கை பொலிஸார் மிகவும் கவனத்துடன் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து சிறுமியின் ஆபாச வீடியோ வழக்கை விசாரித்து வரும் மகளிர் பொலிஸ் தெரிவிக்கையில், ``போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாலும் சிறுமியின் பெற்றோரே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாலும் அவர்கள் குறித்த விவரங்களை வெளியில் சொல்லக் கூடாது. சிறுமியை அவரின் பெற்றோரே எப்படி இந்த பாலியல் தொழிலுக்கு தள்ளினார்கள் என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். விசாரணையில் சிறுமியின் அம்மா அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். அங்கு வாடிக்கையாளர்களிடம் சிறுமியின் அம்மா நைசாக பேசி பணத்துக்காக இந்த படுபாதக செயலில் ஈடுபட்டுள்ளார். அதை யாருக்குமே தெரியாமல் வீடியோ எடுத்து அதையும் விற்றுள்ளார் சிறுமியின் அப்பா. தற்போது சிறுமியுடன் இருந்த இருவரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்திருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்களின் செல்போன்களிலிருந்து சிறுமி தொடர்புடைய ஆபாச வீடியோக்கள், போட்டோஸ்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.