இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் பெற்றோர் பார்த்த பையனுடன் 18 ஆம் திகதி திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமணம் வேண்டாம், மற்றொருவரை திருமணம் செய்ய விரும்புகிறேன் என வீடியோ வெளியிட்ட மகளை, துப்பாக்கியால் தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கோலா கா மந்தீர் என்ற பகுதியில் தானு குர்ஜார் என்ற 20 வயது இளம் பெண் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இவருக்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விக்கி என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கத்தை தொடர்ந்து விக்கியை திருமணம் செய்ய விரும்பியுள்ளார். இது தொடர்பாக தனது பெற்றோரிடம் பேசியபோது முதலில் சம்மதம் தெரிவித்துள்ளனர். பின்னர் திருமணத்திற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தானுக்கு அவரது தந்தை மகேஷ் குர்ஜார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 18 ஆம் திகதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண அழைப்பிதழ்கள் அடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று தானு குர்ஜார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நான் விக்கியை திருமணம் செய்ய விரும்புகிறேன். எனது குடும்பத்தினர் முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். பின்னர் மறுப்பு தெரிவித்தனர். பெற்றோர் தினமும் என்னை அடிக்கிறார்கள். என்னை கொலை செய்வதாக மிரட்டுகிறார்கள். எனக்கு ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு என்னுடைய குடும்பம்தான் காரணம் என கட்டாய திருமணம், காதலுக்கு எதிர்ப்பு, கொடுமை குறித்து 52 வினாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பொலிஸார் மற்றும் அந்த உள்ளூர் பஞ்சாயத்து நபர்கள் பார்த்து, தானு வீட்டிற்கு விரைந்துள்ளனர். பொலிஸார் வீடியோ குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தானு பெற்றோருடன் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அப்போது பொலிஸாரிடம் தனது மகளை சமாதானப்படுத்த சற்று நேரம் கொடுங்கள் என மகேஷ் கேட்டு, பொலிஸார் இருக்கும் இடத்தை விட்டு சற்று தொலைவில் தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மகேஷ் அருகே அவரது உறவினர் ராகுல் என்பவரும் உடன் இருந்துள்ளார்.
தானுவுடன் மகேஷ் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென துப்பாக்கியை எடுத்து மகள் என்று கூட பார்க்காமல் மார்பில் சுட்டுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மகேஷ் உறவினர் ராகுல் தானுவின் உடலின் பல்வேறு இடங்களில் சுட தானு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
பொலிஸார் மகேஷ் மற்றும் ராகுலை கைது செய்ய முயன்றனர். ராகுல் பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓடிவிட்டார். மகேஷை கைது செய்த நிலையில், தானுவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக அருகில் சென்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
தாங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய மறத்ததால் பெற்ற மகளையே பொலிஸார், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் தந்தை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.