மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை தொடர்பில் நேற்றைய தினம் ஒன்று கூடிய மக்கள் பிரேதப் பெட்டி சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், காமன்ஸ், பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்றன. இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி இங்கு மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்று மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேபோன்று கடந்த மாதம் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, இந்த மதுபானசாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் மதுபான விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டது என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் பிரேதப் பெட்டியுடன் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்துக்கு மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.
இந்தப் பிரச்சினையை அரசாங்க அதிபர் உடனடியாக மதுவரி திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நிலையில் குறித்த மதுபானசாலையை தற்காலிகமாக மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் நிரந்தர தீர்வு கோரி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. [ ஒ ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.