மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேசசபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீவைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்துள்ளது. குறித்த வீட்டிலிருந்த பொருட்கள், கதவு, ஜன்னல், கூரை என்பனவற்றில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று–செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சி. சர்வானந்தனின் வீட்டிலேயே குறித்த சம்பவம் நேற்று இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தற்செயலாக ஏற்பட்டதில்லையெனவும் திட்டமிட்டு தீவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் வீட்டு உரிமையாளரான சி. சிவானந்தன் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். நேற்று இரவு வீட்டில் இல்லாத நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸார், மின்சார சபையினர் முன்னெடுத்தாகவும் பிரதேசசபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேநேரம் தீ சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான செ.நிலாந்தன் ஆகியோர் நேரில்சென்று பார்வையிட்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.