மதில்மேல் பூனையாக இன்னும் தமிழரசு!
மதில்மேல் பூனையாக இன்னும் தமிழரசு!

நேற்றைய மத்திய குழுக் கூட்டத்திலும் முடிவில்லை

(ஆதவன்)

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் நேற்றும் முடிவேதும் எடுக்கப்படாமல், இழுபறிநிலையே தொடர்ந்தது.

தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்றுக்காலை இடம்பெற்றது.


அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மத்தியகுழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
 

அவர் மேலும் தெரிவிக்கையில்:-தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயத்தில் உரிய நேரத்தில் தீர்மானம் எடுப்போம். தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்று இன்னமும் தெரியாது. அவர்களுடைய தேர்தல் அறிக்கைகள் இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் தீர்மானிப்பதாகவே முடிவெடுத்திருந்தோம்.


அத்துடன் தங்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ள இருவர் தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலயத்துக்கு வந்து எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இது ஓர் ஆரம்பகட்ட பேச்சு வார்த்தை மட்டுமே. நாங்கள் தொடர்ந்தும் இவ்வாறானவர்களுடன் பேசுவோம். ரணில் விக்கிரமசிங்க தன்னை வேட்பாளராக அறிவித்தால் அவரோடும் பேசுவோம். யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து எவ்வித முடிவும் இது வரை எடுக்கப்படவில்லை.


ஆனால், இதுவரை அதிகாரப்பகிர்வு தொடர்பாக பொதுவெளியில் சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டிருந்த வேட்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம் என்று சொல்லத் தலைப்பட்டுள்ளனர்.


13 ஆம் திருத்தம் முழுமையான தீர்வு அல்ல, அதனை நாம் ஏற்கவில்லை. ஆனால் அரசியலமைப்பில் உள்ளதை யாவது அமுல்படுத்தவேண்டும் என்பதை நாம் சொல்லியிருக்கின்றோம். எனவே அந்தப் பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமாக இருந்தன. இருப்பினும் அவர்கள் சொன்னதைச் செய்வார்களா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கின்றது.

மும்முனைப்போட்டி ஒன்று ஏற்படுமாக இருந்தால் தமிழ் பேசுகின்ற மக்களின் வாக்குப்பலம் தலைமையாமாக இருக்கும். இதனை நாம் உதாசீனம் செய்யக்கூடாது. மிகவும் கவனமாக எமது பேரம் பேசுதலை நடத்தவேண்டும். சந்தர்ப்பத்தைச் சரியாக உபயோகப்படுத்த வேண்டும் என்ற கருத்தோடு நாங்கள் இருக்கின்றோம்.


தமிழ்ப் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக கடந்த மத்தியகுழுக் கூட்டத்திலேயே பலர் எதிரான கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். எனவே இன்று அதைப் பற்றி பேசவில்லை. மக்களது கருத்துகளையும் அறிந்து தனிப்பட்ட கருத்துகளைச் சொல்வதற்கான சுயாதீனம் கட்சியின் சகல உறுப்பினர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.


சிவாஜிலிங்கம் வழமையாகவே அரசதலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் தான். பழக்கதோசத்தில் இந்தமுறையும் அவர் போட்டியிடலாம். அதில் எமக்குப் பிரச்சினையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை - இந்த விடயம் குறித்து இன்னும் கட்சி முடிவெடுக்காத நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வொன்றில், “பொதுவேட்பாளர் விடயம் ஒரு விஷப்பரீட்சை. பொதுவேட்பாளருக்கு எதிராக நாம் தீவிரமாக பிரசாரம் செய்வோம்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (ச)

#vavuniya_news

328 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.