மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பு என்ற பெயரில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஈ.சரவணபவனின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;
மக்கள் பக்கம் இருப்பதாக கூறும் அனுரகுமார திஸாநாயக்க இன்னமும் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளியிடாமல் வைத்துள்ளார். தேர்தலுக்கு பின்னர் தான் பார் பெமிட் பட்டியல் வெளிவருமோ தெரியவில்லை.
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உண்டு என்பது புலனாகிறது. சிலரிடம் இருக்கிறது. சிலர் இல்லை என்று சொல்லிக்கொள்கின்றார்கள். சிலர் வேறு பெயர்களில் மாற்றி வைத்திருக்கின்றார்கள். எத்தனையோ விடயங்கள் நடந்தேறிவிட்டன. பணப்பரிமாற்றங்களும் நடந்து முடிந்துவிட்டது.
தேர்தலுக்கு பின்னர் அனுரகுமார திஸாநாயக்க பெயர் விபரங்களை வெளியிடுவதால் எந்த பிரியோசனமும் இல்லை. நீங்கள் தெற்கில் மட்டுமல்ல வடக்கு - கிழக்கு என எங்கும் ஊழலற்ற ஆட்சியை நிறுவுவதாக இருந்தால் உண்மையை வெளியிடுங்கள் - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.