இலங்கை அரசாங்கத்தின் மீது இணையனுசரணை நாடுகள் அதிருப்தி
மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் மிகச் சிறிய முன்னேற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளது என்று இணையனுசரணை நாடுகள் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணையனுசரணை வழங்கிய நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் உள்ளதாவது:-
இலங்கையில் மே மாதம் தேர்தல்கள் நடத்தப்பட்டதை நாங்கள் வரவேற்பதுடன், 2009ஆம் ஆண்டு ஆயுத மோதலின்போது உயிரிழந்தோருக்கான அஞ்சலி நிகழ்வுகள் மிக அமைதியான வகையில் இடம்பெற்றுள்ளதை நாங்கள் கவனத்திற்கொண்டுள்ளோம். எனினும், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், அரசியலமைப்புச் சீர்திருத்தம் குறித்து வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் சிறிதளவு முன்னேற்றத்தையே காண் பித்துள்ளது. இதனால் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
இலங்கையில் நீண்டகாலமாக நிலவும் தண்டனை விலக்களிக்கும் போக்குக்கு நாங்கள் தீர்வைக் காணவேண்டும். மேலும் ஊடகவியலாளர்கள். மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூகத்தினர் சுதந்திரமாக பாதுகாப்பாக செயற்படக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயல்முறை நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.
இதற்கு, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப்பெறுவது மிகவும் முக்கியமான விடயமாகும். அரசாங்கம் பயங்கரவா தத்தடைச்சட்டத்தை நீக்குவதே தனது நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ள போதிலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம் என்றுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.