மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனமொன்று திருகோணமலை துறைமுகத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் திருகோணமலை துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இடம்பெற்றது. மன்னாரில் அமைக்கப்படவுள்ள காற்றாலை அமைக்க திருகோணமலை துறைமுகத்திலிருந்து 76 மீற்றர் நீள காற்றாலை விசையாழியொன்று லொறியில் நேற்று ஏற்றிச் செல்லப்பட்டது. கண்ணாடி இழையால் ஆன 76 மீற்றர் நீள காற்றாலை விசையாழி, 36 தொன் எடையைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் காற்றாலையை ஏற்றிக்கொண்டு துறைமுக நுழைவாயிலுக்கு கொண்டு செல்லும் போது லொறி சமநிலையை இழந்தது கவிழ்ந்தது. விபத்தில் லொறி சாரதி மற்றும் ஒருவர் காயமடைந்து திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காற்றாலை கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அதிகாரிகள் காற்றாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
சீனாவிலிருந்து நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட பத்து காற்றாலை விசையாழிகளில் ஏழு காற்றாலைகள் இதுவரை மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதற்கிடையே மன்னாரில் காற்றாலைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.