காற்றாலை மின் திட்டம், கனிய மணல் அகழ்வு திட்டம் போன்றவற்றால் மன்னார் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதுடன் மன்னார் தீவு அழிந்து போகக் கூடிய அளவுக்கு இந்த திட்டங்கள் காணப்படுவதாக வன்னி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை குழு சார்பாக கோடாரி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சம்சோன் ஜெறோம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று (07) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை மக்கள் போராட்டம் நடத்தி கனிய மணல் அகழ்வு திட்டங்களை நிறுத்த வேண்டி இருக்கின்றது. அதை பாராளுமன்றத்தில் தடுத்திருக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுத்திருக்க வேண்டும். ஆனால் அது அங்கு தடுக்கபடாமையினால் மக்கள் இன்று வீதிகளில் இறங்கி போராடுகின்றார்கள்.
இவ்வாறு மக்கள் நலனையும், எங்கள் வளத்தையும் பாதிக்க கூடிய இவ்வாரான திட்டங்களை முடிந்த அளவு அகற்ற கூடிய செயற்பாட்டை செய்வதுடன் முடிந்த வரை மன்னார் மாவட்டத்தில் இவ்வாறான திட்டங்கள் புதிதாக உள்வராத வகையில் என்னால் செய்ய முடிந்த செயற்பாட்டை செய்வேன்.
மீன்பிடி துறையில் எமது மக்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். முக்கியமாக இந்திய இழுவைப்படகுகள், பல்தேசிய கம்பனிகள் எங்கள் கடல் பகுதிக்கு வந்து நாங்கள் பிடிக்க வேண்டிய மீன்களையும், எமக்கு வர வேண்டிய வளங்களையும் சுரண்டியும் அள்ளியும் செல்கின்றார்கள். வெறும் வாய் பேச்சிலே இவற்றை கடந்து செல்கின்றோம்.
இவற்றுக்கான தீர்வை ஆக்கபூர்வமாக தேட வேண்டும். அப்போதுதான் எமது மக்களின் பொருளாதாரம் வளரும். விவசாயத்தை பொறுத்த வரையில் மூன்று மாவட்டங்களிலும் நீரை கொண்டு வர வேண்டிய தேவை உள்ளது.
அது கட்டாயம் செய்யப்பட வேண்டும். ஆனால் குடியேற்றம் இல்லாத நீர் வடக்குக்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.