மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளைய தினம் மன்னாரில் இடம்பெறவுள்ள கவனவீர்ப்பு பேரணியில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவை வழங்குமாறு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
காற்றாலை மின் உற்பத்தி மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் செயல் திட்டமாக காணப்பட்டாலும், குறித்த காற்றாலைகள் அமைக்கப்படும் இடம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், மன்னார் தீவு மற்றும் பெருநிலப் பரப்பிலும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற போதும், குறித்த நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
எனவே, மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழு, பொது அமைப்புக்கள் ,மீனவ அமைப்புகள் உள்ளடங்களாக சிவில் அமைப்புக்கள் இணைந்து நாளைய தினம் காலை மன்னாரில் கவனவீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கவனவீர்ப்பு பேரணியானது, காலை 9 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடையும். அதனை தொடர்ந்து, ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கை அடங்கிய மனு மன்னார் மாவட்ட செயலருக்கு வழங்கி வைக்கப்படும்.
எனவே குறித்த பேரணியில் மன்னார் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளடங்களாக அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது இருப்பை தக்க வைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.