மன்னார் நகர மையப்பகுதியில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சதொச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கை மற்றும் புதைகுழியை சூழ உள்ள பகுதியை ஸ்கேன் மற்றும் அகழ்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக மன்னார் சதொச வளாகத்திற்கு அருகில் இராணுவ முகாம் அமைந்திருந்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் அகழ்வு பணிகள் இன்று வியாழக்கிழமை (07) நடைபெற்றது.
இருப்பினும் குறித்த அகழ்வு பணி தொடர்பான செயற்பாடுகளையோ, ஸ்கான் செயற்பாடுகளையோ புகைப்படம் எடுக்கவோ, காணொளியாக பதிவு செய்யவோ மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே சதொச மனித புதைகுழி அகழ்வு பணியை செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக குறித்த அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிடவும் அகழ்வு செயற்பாடுகளை ஆவணப் படுத்தவும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் புதிய நீதிபதியினால் தற்போது அகழ்வு பணியையோ அல்லது புதைகுழி தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளை கணொளியோ புகைப்படமோ எடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அகழ்வு தொடர்பிலும், புதைகுழி வழக்கு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகள் குரல் பதிவுகளை வழங்க மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.