மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயம் என்பதுடன், காட்டு மிராண்டித்தனமான ஒரு விடயமாகும்.
இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும்.
நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள். இன்றும் தொடர்ச்சியாக நொச்சிகுளம் கிராமத்தின் மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுகிறது .
இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு தொடர்பாடல் அமைச்சரோடு நான் நேரடியாக பேசியிருந்தேன். காரணம் துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏ.கே 47 பாவிக்கப்பட்டுள்ளது .
இப்பொழுது எந்த வகையான துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியப் படவில்லை. இந்த துப்பாக்கி பிரயோகம் நொச்சிகுளம் மக்களை பார்த்து தான் பிரயோகிக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
மன்னார் பொலிஸாருடைய மெத்தனப் போக்கும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழலிலே மீண்டும் மன்னார் நீதி மன்றத்திற்கு முன் இந்த படுகொலைகள் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இது கண்டிக்கத்தக்கது.
இவ்விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்களினதும் கவனத்திற்கும், நாடாளுமன்ற கவனத்திற்கும் முக்கியமான விடயமாக கொண்டு வரவுள்ளேன். ஏனென்றால் இது தொடர்ச்சியாக நடைபெறுகிற விடயமாக இருக்கிறது.
போன உயிர்களை மீளப் பெற முடியாது. துப்பாக்கி பிரயோகத்தால் உயிர் நீத்த குடும்பங்கள் பல அந்த கிராம மக்கள் அச்சத்தோடு வாழுகின்ற நிலைமை தொடர்கின்றது.
ஆகவே இதன் முழுப்பொறுப்பையும் பொலிஸார் எடுக்க வேண்டும் .இந்த சம்பவத்திற்கு காரணம் பொலிஸாருடைய கவனயீனம் அசமந்தப்போக்கு என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.
முப்படைகள் அங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கும் போது இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அந்த வகையில் இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.
சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும். இதற்கான குழு அடங்கிய புலனாய்வு துறை நடவடிக்கைகளை பொலிஸார் உடனடியாக ஆரம்பித்து செயலில் இறங்க வேண்டும்.
மன்னாரில் உள்ள பொலிஸாரை மட்டும் வைத்து இதற்குரிய நடவடிக்கைகளை செய்து கொள்வது முடியாத காரியமாகும். எனவே கொழும்பில் இருந்து விசேட குழு அடங்கிய பொலிஸார் வரவழைக்கப்பட்ட வேண்டும்.
பொலிஸார் அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.