மன்னார் நீதிவான் நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்றையதினம் இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் திகதி மன்னார் - உயிலங்குளம் பகுதியில் மாட்டுவண்டிச் சவாரியொன்று நடைபெற்றபோது ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து 40வயதுடைய யேசுதாசன் றோமியோ மற்றும் 33வயதுடைய யேசுதாசன் தேவதாஸ் ஆகிய சகோதரர்கள் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அது தொடர்பான வழக்கு விசாரணை மன்னார் நீதிமன்றத்தில் நேற்று நடைபெறவிருந்தது. இந்த இரட்டைக் கொலைகளில் சந்தேகநபர்களாகக் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரே நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 61வயதுடைய சவேரியன் அருள் மற்றும் 42வயதுடைய செல்வக்குமார் யூட் ஆகியோரே நேற்றுப் படுகொலை செய்யப்பட்டவர்களாவர். நால்வர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நிலையில், மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்றுப் பட்டப்பகல் மேற்கொள்ளப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூடு பொலிஸார் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் ஆயுதம் ஏந்திய பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவ இடத்திலிருந்து 50 மீற்றர் தொலைவில்தான் இராணுவ முகாமொன்றும் உள்ளது. அத்துடன், இதுவொரு பாரதூரமான குற்றப்பின்னணி உடைய விடயம் என்பதால், பொலிஸார் போதிய எச்சரிக்கையுடன் செயற்படவில்லை என்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் செயற்பாடும் கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.