முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் வன்னி மாவட்ட நாடாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை நடாத்தியுள்ளார்.
குறித்த கிராமமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமம் என்பதுடன், வெள்ள அனர்த்தத்தின் போது இந்தக் கிராமத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்ததால், குறித்த சிராட்டிகுளம் கிராமம் தனிமைப்பட்டிருந்தது. இதனால் குறித்த கிராம மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தனர். இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கிராமத்திற்கு நேரடியாகச் சென்று அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார்.
இதன்போது சிராட்டிகுளம் கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிச்சீரமைப்பு, நெல் உலரவிடும் தளம் அமைத்தல், யானைவேலி அமைத்தல், சிராட்டிகுளம் மாதிரிக் கிராமத்தில் தாழ்நிலப் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளமையால் மக்கள் எநிர்நோக்கும் பிரச்சினைகள், பொதுப் போக்குவரத்துப் பிரச்சினை, வனவளத் திணைக்களத்தால் மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட விடயங்கள் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
மேலும், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த உறுப்பினர், குறித்த பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைக்கடிதங்களை தனித்தனியே தன்னிடம் கையளிக்குமாறு தெரிவித்ததுடன், உரிய தரப்பினருடன் பேசி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.