எழிலன்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மாங்குளம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. ஏ -9 பிரதான வீதியின் ஊடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றுக்காலையிலிருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக, ஏ-9 பிரதான வீதியில் மாங்குளம் நகரப் பகுதிக்கு அண்மையாக இரு இடங்களில் வீதியைமேவி வெள்ளம் பாய்வதால்
மூழ்கியது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு தாழ்நில பகுதிகள் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு வீடுகளும் வெள்ளங்களில் மூழ்கியுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவினுடைய மாங்குளம் பனிக்கன்குளம் பகுதிகளில் மக்களின் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாமிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாங்குளம் பகுதியில் 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் மாங்குளம் மகா வித்தியாலயத்தில் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற அதே வேளையிலே மொத்தமாக மாங்குளம் பகுதியில் 36 குடும்பங்களை சேர்ந்த 121 பேர் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இதே போன்று பனிக்கன்குளம் கிராமத்திலும் 6 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. (14.12.2023) காலை 6. 00 மணி முதல் இரவு 8.20 மணி வரையான காலப்பகுதியில் வவுனிக்குளம் 143 மி.மீ,மாங்குளம் 138 மி.மீ. மழை வீழ்ச்சியினையும் இன்று காலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பனங்காமம் 130 மி.மீ., கல்விளான் 120 மி.மீ. , மல்லாவி 102 மி.மீ., ஐயன்கன்குளம் 101 மி.மீ., இரணைமடு 102.5 மி.மீ., சேமமடு 55 மி.மீ. மழை வீழ்ச்சியினையும் பெற்றுள்ளதாக வடக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய முத்துஐயன் கட்டு குளம் தவிர்ந்த ஏனைய அனைத்து குளங்களும் நிறைந்து வான் பாய்கின்றன.
இவ்வாறான நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் குறிப்பாக மாவட்ட ரீதியான முழுமையான தகவல்கள் இதுவரை சேகரிக்கும் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.






361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.