யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்ககான வேட்புமனுத் தாக்கலின் போது குழறுபடிகள் அல்லது சதி நடவடிக்கைகள் இடம்பெற்றிருப்பதாக சில தரப்புக்கள் முன்வைத்த குற்றச்சாட்டிற்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாண உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை.
ஏனெனில் சிலரது குற்றச்சாட்டை பார்க்கிற போது அவர்களின் வேட்பு மனு தயாரிப்பில் அவர்களின் அலுவலகங்களுக்குள் நாங்கள் சென்று ஏதோ திருகு தாள வேலைகளை செய்தது போல அவர்களது குற்றச்சாட்டுக்களில் தெரிகிறது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் என்பது வெற்றுக் கதைகள் மட்டும் தான். ஆகவே வெறும் கதைகளை யாரும் கதைக்க தேவையில்லை. எங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டாம்.
இந்த வேட்பு மனுக்களை தாக்கல் செய்கின்ற முறைமைகள் தொடர்பாகவும் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் சகலருக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களும் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது.
இந்த விடயங்கள் எல்லோருக்குமே நன்றாக தெரியும். சாதாரணமாக (A/L) கா.பொ.த. உயர் தரம் படிக்கின்ற ஒரு மாணவரிடம் கேட்டால் கூட இது தான் இப்படிதான் என தெளிவாக சொல்லுகிற போது இவர்களுக்கு தெரியாமல் இருப்பதென்பது இவர்களிடத்தே அக்கறையில்லை என்பதை காட்டுகிறது.
ஆகையினால் தாங்கள் தவறுகளை செய்துவிட்டு எங்கள் மீது குற்றஞ்சாட்டுகிற இந்த மாதிரியான கூற்றுக்களுக்கு நாங்கள் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.
தங்களது இயலாமையை மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்தியை பயன்படுத்த வேண்டாம்.
இருந்த போதிலும் இங்குள்ள ஒரு சபை கூட நிராகரிக்கப்படாமல் 17 சபைகளிலும் சரியாக செய்து தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பதென்பதை இவர்களால் பொறுத்துக் கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியவில்லை.
அதனாலேயே தேவையில்லாத விமர்சனங்களை செய்கின்றனர். எவ்வாறாயினும், எங்களுடைய வெற்றி உறுதியானது. இந்த வேட்புமறுத் தாக்கலில் இருந்தே அதை ஆரம்பித்திருக்கிறோம் என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.