சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து குறித்த வர்த்தகரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , அவரிடம் இருந்து 330 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றினர்.
மேலும், குறித்த நபரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளை அவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருளை பெற்று பாவித்து வருவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.