4 நாள்கள்: 13 அமர்வுகள் 3,920 பேருக்குப் பட்டங்கள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை புதன்கிழமை முதல் 22ஆம் திகதி சனிக்கிழமை வரை - நான்கு நாள்கள் பதின்மூன்று அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நேற்றுத் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இதன்போது பட்டமளிப்பு விழாக் குழுவின் தலைவரும், கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் சி.ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றிய விபரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
39ஆவது பட்டமளிப்பு விழாவுக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில், உயர்பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பட்டதாரிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன – என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.