நாட்டை வந்தடைந்த ரோஹிங்கிய அகதிகளிடமிருந்து நோய்த்தொற்றுக்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்பட்டமையினாலேயே அவர்களைப் பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தம்மிடம் விளக்கமளித்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்கழுவின் தவிசாளர் எல்.ரி.பி.தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.
அண்மையில் மியன்மாரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதுடன், எஞ்சியோர் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகளிடம் விசாரணை நடத்துவதற்கு கடந்த 26 ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்துக்குச் சென்றிருந்த போதிலும், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கமுடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து திங்கட்கிழமை ( கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்துக்கு அழைக்கப்பட்ட குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் இதுகுறித்து விளக்கம் கோரப்பட்டது. அதனையடுத்து இதுபற்றி ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்திய ஆணைக்குழுவின் தவிசாளர் எல்.ரி.பி.தெஹிதெனிய மேலும் கூறியதாவது:
அண்மையில் இலங்கையை வந்தடைந்த ரோஹிங்கிய அகதிகளுடன் தொடர்புடைய வகையில் தோற்றம் பெற்றிருக்கும் நெருக்கடிநிலை குறித்துக் கலந்துரையாடுவதற்காக நேற்று முன்தினம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்தையும் விமானப்படை அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைத்திருந்தோம்.
ஏனெனில் மேற்குறிப்பிட்ட ரோஹிங்கிய அகதிகள் முல்லைதீவிலுள்ள விமானப்படைத்தளத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வேளையில், அவர்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரியான சந்திரசிறி அவ்விடத்துக்கு விஜயம் செய்திருந்தார். இருப்பினும் அகதிகள் குறித்து ஆராய்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின்படி நீதிமன்ற உத்தரவின் பிரகாரமோ அல்லது வேறு விதமாகவோ தடுத்துவைக்கப்பட்டிருப்போரை சென்று பார்வையிடுவதற்கும், அவர்களது நிலை குறித்து ஆராய்வதற்கும் ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் அவ்வதிகாரத்துக்கு அமைவாகவே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி அங்கு ஆராய்வுக்குச் சென்றார். இருப்பினும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதுகுறித்துக் கேட்டறியும் நோக்கிலேயே குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகமும், விமானப்படை அதிகாரிகளும் ஆணைக்குழுவுக்கு வரவழைக்கப்பட்டனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் குறித்து தான் பெரிதும் கவலையடைவதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்மிடம் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி நாட்டை வந்தடைந்த ரோஹிங்கிய அகதிகளால் ஏதேனும் நோய்கள் பரவக்கூடுமோ என்ற கரிசனையின் விளைவாகவே அவர்களைப் பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், தற்போது சுகாதாரப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதனால் அகதிகளின் நிலைவரம் குறித்து ஆராய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இடமளிப்பதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதியளித்துள்ளார். இவற்றின் அடிப்படையில் நாம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருக்கிறோம் என்றார்.
RESIDENTS OF MULLIVAIKKAL PROVIDE SUPPORT AND SHOW SOLIDARITY TO ROHINGYA ASYLUM SEEKERS
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.