வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா உடல்நலக் குறைவால் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
வங்கதேச தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் வங்கதேச பிரதமருமான 79 வயதான காலிதா ஜியா தனது குக்ஷான் இல்லத்தில் இருந்து அதிகாலை 1.40 மணியளிவில் எவெர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அவரது மருத்துவர் ஜாஹித் ஹொசைன் கூறுகையில், “அவருக்கு பல பரிசோதனைகளை பரிந்துரைக்கப்பட்டுள்ளது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஒரு தனி அறையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளார்” என்றார்.
ஓகஸ்ட் 21 அன்று, காலிதா ஜியா 45 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
விடுதலை
கடந்த 5 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் இருந்த காலிதா ஜியா, ஓகஸ்ட் 6 ஆம் திகதி வங்கதேச அதிபர் முகமது சஹாபுதின் உத்தரவில் விடுவிக்கப்பட்டார். ஓகஸ்ட் 5 அன்று ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
உடல்நலக்குறைவு
காலிதா ஜியா நீண்டகாலமாக கல்லீரல் அழற்சி, மூட்டுவலி, நீரிழிவு நோய், சிறுநீரகம், நுரையீரல், இதயம், கண்கள் தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடி வருகிறார்.
இதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி மார்பு பகுதியில் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு நவம்பரில் அவருக்கு நுரையீரல் அழற்சி இருப்பது கண்டறியப்பட்டு அவர் வெளிநாடு செல்ல பரிந்துரைக்கப்பட்டார்.
வழக்குகள்
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் 5 வெவ்வேறு வழக்குகளில் இருந்து காலிதா ஜியா விடுவிக்கப்பட்டார். அதில் போலியாக பிறந்தநாள் கொண்டாடியது மற்றும் போர்க் குற்றவாளிகளுக்கு உதவியது போன்றவைகளாகும்.
பதவிக்காலம்
காலிதா ஜியா 1991 ஆம் ஆண்டு மார்ச்சில் வங்கதேச பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 மார்ச் வரை ஆட்சியில் இருந்த அவர் மீண்டும் 2001 ஆம் ஆண்டு ஜூனில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு அக்டோபர் வரை பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.