இலங்கையின் வனப்பரப்பின் அளவை மூன்று வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார் வனவளப் பாதுகாப்பு அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி இதன்படி தற்போது 29 வீதமாகவுள்ள நாட்டின் வனப்பகுதி 2030ஆம் ஆண்டளவில் 32 வீதமாக உயர்த்தப்படும் என்றிருக்கின்றார் அவர். அமைச்சரின் கருத்துகள் செயல்வடிவம் பெறுமானால் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பகுதிகள் வனப்பகுதிகளாக மாற்றம் பெறும்.
தென்னமெரிக்க நாடுகளுக்கு நிகராக, உலகின் ஆகச்சிறந்த வனக்கட்டமைப்பைக்கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை முன்னொரு காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், இலங்கையின் பொருளாதாரத்தைப் போன்று வருடாவருடம் தேய்ந்துவந்த வனப்பகுதிகள் இன்று ஆபத்தின் விளிம்பில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றன. ரயில் பாதைகளை அமைப்பதற்காகவும், விவசாய நடவடிக்கைகளுக்காகவும், புதிய குடியேற்றங்களுக்காகவும், சட்ட விரோத வணிகங்களுக்காகவும் இலங்கையின் காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு, இன்று மனித விலங்குகள் வாழ்விட மோதல்கள் தினம்தினம் ஏற்படும் அளவுக்கு நிலைமை கை மீறியிருக்கின்றது. விளை நிலங்களுக்குள் பன்றிகள் ஊடுருவுகின்றன என்றும், குடியிருப்பு மனைகளுக்குள் யானைகள் அத்துமீறுகின்றன என்றும் நாம் அன்றாடம் முறைப்பட்டுக் கொள்கின்றோம். ஆனால், அதைவிடப் பலமடங்கு அதிகரித்த அத்துமீறலை மனிதர்கள் வன விலங்குகளின் வாழ்விடங்களுக்குள் மேற்கொண் டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. விலங்குகளின் வாழ்விடங்களுக்குள் நாம் அத்துமீறினால், அவற்றின் உணவு ஆதாரங்களை 'அபிவிருத்தி என்ற போர்வையில் பறித்துக் கொண்டால், தம் பாரம்பரிய இருப்பிடங்களில்' அவை அங்கலாய்த்துத் திரியவே செய்யும். இது எவ்வாறு வனவிலங்குகளின் அத்துமீறல் என்று பொருள்படும்?
புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் என்பனவற்றுக்கு எதிரான ஒரு 'முன்னிலைப் போராளியாக' உலக அளவில் தன்னை நிலைநிறுத்திவரும் இலங்கை, மேற்கத்தேய நாடுகளுக்குப் பாடமெடுக்கும் வகையிலும், தன் இருப்பைப் பாதுகாக்கும் வகையிலும் வனத்தின் இருப்பை மேம்படுத்துவதும் பாதுகாப்பதும் தவிர்க்கப்பட முடியாததாகின்றது. இவ்வாறான தொரு பின்னணியில் இலங்கையின் வனப் பகுதியை அதிகரிப்பது என்ற அரசாங்கத்தின் முடிவும், அதற்குரிய காலஎல்லை நிர்ணயிக்கப்பட்டமையும் உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், துரதிர்ஷ்டம் என்ன வெனில், இலங்கையின் வனப்பகுதியின் இருப்பை உறுதிப்படுத்தல் தொடர்பாகவும், மேம்படுத்தல் தொடர்பாகவும் நாட்டின் வனவளப் பாதுகாப்பு அமைச்சு கருத்துகளை வெளியிடுவது இது வொன்றும் முதல்முறையல்ல அமைச்சர் பலித் திராவின் இடத்தில் இதற்கு முன்பிருந்த எத்தனையோ அமைச்சர்கள் இதே கருத்தை திரும்பத்திரும்ப வலியுறுத்தியிருக்கின்றார்கள். ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனம் போன்று வருடாவருடம் வனப்பகுதிகள் சுருங்கிச் செல்கின்றதே அன்றி எந்த நிமிர்வும் மீனெழுச்சியும் நிகழ்ந்தபாடில்லை. ஒருவேளை அமைச்சர் பவித்திரா அதைச் சாத்தியப்படுத்தினால், அவரின் செயற்றிட்டங்கள் இந்தத் தீவில் நின்றுபேசும்.ஏனெனில் வனப்பகுதியை அதிகரிப்பதென்பது இன்று உலகளாவிய சவால்...!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.