வவுனியா - கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்குத் தனது மகளை அனுப்புவதற்காகச் சென்ற தாயும் அவரது 6 வயதான மகளும் ஹென்டர் ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் கன்னாட்டி பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே மரணமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (16.06.2023) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினமான இன்றைய தினம் காலை 7 மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்குச் செல்வதற்காகக் குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காகக் காத்திருந்தனர்.
இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாகப் பயணித்த ஹெண்டர் ரக வாகனம் வீதியை விட்டு இறங்கி கரையில் நின்ற அவர்கள் மீது மோதியுள்ளது.
விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
மற்றொரு சிறுவன் ஹெண்டர் ரக வாகனத்தைக் கண்டதும் ஓடிச்சென்று விபத்தைத் தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற போது ஹெண்டர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர்.விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் துரத்திப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சரமாரியாகத் தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டுள்ளனர்.
இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
yfdxef
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.