வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு வவுனியா மேல்நீதிமன்றம் பிணைவழங்கி உத்தரவிட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடுபுகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர்.
குறித்த இரட்டைக் கொலைகளுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி.சில்வா ஆஜராகி சந்தேகநபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணைகோரி மனுத்தாக்கல் செய்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவாதிகளால் பிணை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு கடுமையாக வாதிட்டனர். எனினும், சட்டமா அதிபர் திணைக்களத்தினர் பிணைமறுப்புக்கு விசேட காரணங்களை முன்வைக்காததைத் தொடர்ந்து, குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.