வவுனியா மாநகரசபையின் முதல்வர், பிரதிமுதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
வவுனியா மாநகரசபை உறுப்பினர்களான க.பிரேமதாஸ் மற்றும் சு.விஜயகுமார் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சு.விஜயகுமார் தேசிய மக்கள் சக்தியின் சார்பிலும், க. பிரேமதாஸ் சுயேச்சையாகவும் போட்டியிட்டு உறுப்பினர்களாகத் தெரிவானவர்கள். மனுவில் பிரதிவாதிகளாக ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சு.காண்டீபன், ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் ப.கார்த்தீபன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வவுனியா மாநகரசபையின் முதல்வர் பிரதிமுதல்வர் தெரிவின்போது பிரதிவாதிகள் சட்டத்துக்கு முரணான வகையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத ஒருவராக உள்ளார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அந்தப் பதவிகளை வகிப்பதற்குத் தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் பதவிகளை செல்லுபடியற்றதாக்கக் கோரி இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுமீதான விசாரணைகள் முடிவடையும் வரை முதல்வர், பிரதிமுதல்வர் ஆகியோர் அந்த பதவிகளை வகிப்பதற்கு இடைக்காலத் தடை உத்தரவை நேற்று வழங்கியது. மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் முன்னிலையாகியிருந்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.