தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் மக்களின்பால் திடீர்ப் பரிவு ஏற்பட்டிருக்கின்றது. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பில் எல்லோரும் பேசி முடிவுக்கு வருவோம் என்று தன்னைச் சந்தித்த தமிழ் அரசியல் தரப்புகளிடம் தெரிவித்துள்ளார்ர விக்கிரமசிங்க. ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறுவது முதல் தடவையல்ல என்பதால், தமிழ் மக்கள் அவரது கருத்துகள் தொடர்பாகப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நல்லாட்சிக் காலத்திலும், அதன்பின்னர் ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்தபின்னும் தமிழ்மக்களின் பிரச்சினை தொடர்பாக அரசியல்தீர்வு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு வாக்குறுதிகளைத் தந்திருக்கின்றார். ஆனால் அவை யாவும் காற்றில் பறக்கவிடப்பட்ட வாக்குறுதிகளாகவே இருந்தன. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் செயற்பாடுகள் இம்மியளவுகூட முன்னகரவில்லை.
நாட்டில் பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டைப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க தமிழ் மக்களின் ஒத்துழைப்பை, குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைக் கோரியிருந்தார். நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மூலகாரணமான இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தரப்புகள் கோரிக்கை விடுத்த போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளை முற்றிலுமாக தான் அறிந்தவன் என்றும், அவற்றுக்குத் தீர்வு வழங்குவேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க பாடமெடுத்திருந்ததும் அனைவரும் அறிந்ததுதான். நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீர்வுக்காக ரணில் விக்கிரமசிங்க கிஞ்சித்தும் முயற்சி எடுக்கவில்லை. அவர் பதவியில் இருந்தகாலத்தில் தமிழ் மக்களின் தாயகப் பகுதிகளில் திட்டமிட்ட பௌத்தமயமாக்கல். அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள். வனவளத் திணைக்களம் உள்ளடங்கலாக திணைக்களங்களின் ஆக்கிரமிப்பு என்பன அரச ஆதரவுடன் வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த் தலைமைகள் அவை தொடர்பாகரணிலின் கவனத்துக்குக் கொண்டுசென்ற போதும், அவற்றைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் பெரும்பான்மை மக்களின் வாக்குகளுக்காகக் 'கமுக்க மாகவே இருந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
தற்போது ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் தமிழ்மக்களின் பிரச்சினைகளில் கரிசனை செலுத்துகின்றார் ரணில் விக்கிரமசிங்க. பதவியில் இருந்தகாலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை களுக்கான தீர்வுக்காக துளியளவு முயற்சியையேனும் எடுக்காத ரணில் விக்கிரமசிங்க, புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஆராய்வோம் என்று மாயஜாலப் பேச்சுகளை திரும்பவும் அவிழ்த்து விடுகின்றார். தமிழ் மக்களின் வாக்குகளை இலக்குவைத்து இந்த நகர்வுகளை அவர் முன்னெடுக்கின்றார். பல தசாப்தங்களாக சிங்களத் தலைவர்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த தமிழ் மக்கள், இனியும் ரணில் போன்றோரின் வாய்வார்த்தைகளை நம்பும் நிலைமையில் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் ரணில் விக்கிரமசிங்கவும், தெற்கு அரசியல் தலைமைகளும் வார்த்தை ஜாலங்களால் தமிழ் மக்களின் வாக்குகளைக் கவர்ந்துவிட முடியும் என்ற கனவை விடுத்து, தமிழ் மக்கள் மீதான கரிசனையைத் தங்கள் செயற்பாட்டில் காட்டவேண்டும்.
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.