வாழ்வின் ஏற்றத்துக்கு ஏகாதசி விரதம்
வாழ்வின் ஏற்றத்துக்கு ஏகாதசி விரதம்


[புதியவன்]

சர்வ ஏகாதசி

ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ஒரு கதை உண்டு. முசுகுந்தன் என்ற அரசன் தன்னுடைய நாட்டில் ஏகாதசி விரதத்தை எல்லோருக்குமான விரதமாக மாற்றி கடைபிடிக்கும் படி நியமித்தார். ஏகாதசி அன்று ஆடு, மாடுகளுக்குகூட உணவளிப்பது இல்லை. அதுவும் விரதமிருந்து அடுத்த நாள் துவாதசி பாரணை அன்றுதான் உண்ண வேண்டும் என்கின்ற ஒரு சட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். முசுகுந்தன் மகள் சந்திரபாகா. சந்திரபாகாவை சோபன் என்கின்ற ஒருவனுக்கு மணம் செய்து கொடுத்தார். அவன் உடல்நிலையில் பலவீனமானவன். உண்ணா நோன்பு குறித்து ஒரு நாளும் எண்ணாதவன். ஒரு முறை, அவன் முசுகுந்தன் நாட்டிற்கு வந்தான். அந்த தினம் ஏகாதசி. அன்று அவனுக்கு எங்கும் உணவு கிடைக்கவில்லை. ஒரு வேளை உணவு இல்லாவிட்டாலும் உயிரை விட்டுவிடும் பலவீனமான உடல்நிலையைப் பெற்றிருந்த சோபன், ஏகாதசி நாளில் நீரும் சோறும் கிடைக்காமல் தவித்து உயிர் நீத்தான். அவன் இறந்து போனாலும், ஏகாதசி நாளில் விரதம் இருந்து இறந்தவனுக்குரிய புண்ணிய உலகம் கிடைத்தது.

அவன் புண்ணிய உலகம் சென்று புண்ணியத்தின் பலனாக தேவபுரம் என்கின்ற நாட்டின் அரசனானான். ஒரு நாள், முசுகுந்தன் ஆண்ட நாட்டிலிருந்து சோமசர்மா என்கின்ற புரோகிதர் தேவபுரம் நாட்டுக்குச் சென்று அரசனைச் சந்தித்தார். அந்த அரசனின் பூர்வீக கதையை தன்னுடைய தவ வலிமையால் தெரிந்து கொண்டு ‘‘நீ சென்ற பிறவியில் தெரியாமலேயே ஒரே ஒருநாள் இருந்த ஏகாதசி விரதத்தால் இப்படிப்பட்ட புண்ணிய பதவியை அடைந்தாய்’’ என்று சொல்ல, அன்று முதல் அவன் முறையாக ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்தான். எல்லா மக்களும் கடைத்தேறும் படியான நிலையை தன்னுடைய நாட்டிலே ஏற்படுத்தினான். அந்த ஏகாதசி விரதம் “ரமா ஏகாதசி விரதம்’’. அந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்து, மறு நாள் துவாதசியில், வாழை சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் சேர்த்துக் கொள்ளாமல் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் முதலிய காய்கறிகளை சேர்த்துக் கொண்டு பாரணை செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் தானம் செய்வதும் கோடி புண்ணியம்.

காமதா ஏகாதசி

காமதா ஏகாதசி என்றால், எத்தகைய தோஷத்தையும் பாவங்களையும் போக்குகின்ற ஏகாதசி. நினைத்த விருப்பங்களை நிறைவேற்றுகின்ற ஏகாதசி. இந்த ஏகாதசி பலனை புரிந்து கொள்வதற்கு ஒரு கதை உண்டு. நாக உலகத்தில் நடந்த கதை. லலிதன் என்ற கந்தர்வனும், லலிதா என்கின்ற அப்சரஸ் பெண்ணும் இணைந்து வாழ்ந்து வந்தனர். லலிதன் கந்தர்வ கானத்தில் சிறந்தவன். அவன் நாகராஜனான சபைக்குச் சென்று பாடினான். அவருடைய பாட்டு அற்புதமாக இருந்தது. ஆனால் திடீரென்று அவனுடைய எண்ணம் தன் மனைவியான லலிதாவின் மீது செல்லும் பொழுது கவனக்குறைவாக பாட்டில் ஸ்வரம் பிசகி தாளம் தட்டியது. புண்டரீகன் உடனடியாக மிகுந்த கோபம் கொண்டு “நீ காம பரவசனாகி, சங்கீதத்தை அவமதித்துவிட்டாய். எனவே நீ அரக்கனாக போகவேண்டும்’’ என்று சபித்துவிட்டான். உடனே லலிதனுக்கு அரக்க உருவம் உண்டாகிவிட்டது. அவருடைய வாய் மிகவும் மோசமான முறையில் கோர வடிவம் கொண்டதாக ஆகிவிட்டது. மிகுந்த துயரத்தை அடைந்தான். இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட லலிதா ஓடிவந்தாள். தன் கணவனுக்கு நேர்ந்த சோதனையைக் கேட்டு வருந்தினாள். இதற்கு என்ன பிராயச்சித்தம் என்பதை முனிவர்களிடம் கேட்கலாம் என்று காட்டுக்குச் சென்றாள்.

அங்கே சிருங்கி முனிவரைப் பார்த்து நடந்த செய்திகளைச் சொல்லி, இதற்கு பிராயச்சித்தம் ஏதேனும் உண்டா என்று கேட்க, அந்த முனிவர் சொன்னார்; “சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசியில் விரதமிருந்து முறையாக எம்பெருமானைப் பாடி, துவாதசியில் அந்தணர்களை அழைத்து தானம் செய்து, அவர்கள் முன்னிலையில் ஏகாதசி பலனை உன் கணவனுக்கு பிராயச்சித்தமாக தத்தம் செய்து கொடுத்தால், அவன் பழைய உருவத்தில் மீண்டு வருவான்’’ என்று சொல்ல, அப்படியே அவள் ஏகாதசி விரதம் இருக்க ஆரம்பித்தாள். ஏகாதசி விரதம் ஆரம்பித்து, ஏகாதசி முழுக்க எதுவும் உண்ணாமல், எம்பெருமானை நினைத்து, அவருடைய மந்திரங்களை ஜபம் செய்து கொண்டிருந்தாள். இரவெல்லாம் கண்விழித்து எம்பெருமானைப் பாடினாள். மறுநாள் அந்தணர்களை அழைத்து ஏகாதசி உபவாசத்தின் பலனை கணவரின் “சாப நிவர்த்திக்காக அர்ப்பணம் செய்கிறேன்” என்று சங்கல்பம் செய்து அர்ப்பணித்தாள். அடுத்த நிமிடம், கணவனுடைய கோர அரக்க உருவம் நீங்கி பேரழகனாக மாறினான். ஒரு தங்க விமானம் வர, அதில் ஏறிக் கொண்டு அவர்கள் மகிழ்வுடன் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பினர். எந்த தோஷத்தையும் நீக்கி மங்கலங்களை செய்யக் கூடியது இந்த காமதா ஏகாதசி என்பது இதில் இருந்து தெரிகிறது.

“பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில் வாழவல்ல மாயமணாளநம்பீ!
தனிக்கடலே! தனிச்சுடரே! தனியுலகே என்றென்று
உனக்கிடமாய்யிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே’’
– என்ற பாசுரத்தை பாராயணம் செய்யுங்கள்.

பாபவிமோசனி ஏகாதசி

வசந்த காலமான சித்திரை மாதத்தில் வருகின்ற தேய்பிறை ஏகாதசிக்கு பாபவிமோசனி ஏகாதசி என்று பெயர். ராகுவின் சதய நட்சத்திரத்தில் ஏற்படுகிறது. ஏகாதசி விரதம் மூன்று தினங்கள் உள்ளடக்கியது. தசமியில் தொடங்க வேண்டும். ஏகாதசியில் முழு உபவாசம் இருக்க வேண்டும். அதிதி பூஜை செய்து பாரணையை நிறைவு செய்ய வேண்டும். வட நாட்டிலே ஏகாதசி விரதத்தை மிகவும் கண்டிப்பாகப் கடைப் பிடிப்பார்கள். அவர்கள் கோதுமை ரொட்டிகளை காய்கறிகளோடு பிரசாதமாக எடுத்துக் கொள்கிறார்கள். நாம் நம் மரபுப்படி அரிசி சாதம், காய்கறிகளுடன் படைக்கிறோம். இதில் உணவைவிட மனநிலைதான் முக்கியம். உபவாசம் என்றாலே பட்டினி கிடப்பது என்பது மட்டும் பொருள் அல்ல. அன்று மற்ற உலகியல் காரியங்கள் ஒருபுறம் செய்து கொண்டிருந்தாலும்கூட முழுமையாக இறைவனிடத்திலே நம்முடைய மனதைச் சமர்ப்பிக்கிறோம். அவருக்கு அருகாமையிலே வாசம் செய்கிறோம் என்றும் அர்த்தம். பெரியாழ்வார் பட்டினி நாள் என்பதற்கு புதிய விளக்கம் தம் பாசுரத்தில் அருளிச் செய்கிறார். இறைவனை நினைக்காத நாள் பட்டினி நாள். இறைவனை நினைத்து பூஜை செய்த நாள் சாப்பிட்ட நாள் என்பது அவர் வாக்கு. அந்தப் பாசுரம் இது.

“கண்ணா! நான்முகனைப் படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
வேத நாள்மலர் கொண்டு உன பாதம்
நண்ணாநாள்! அவை தத்துறுமாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே’’

இதை மனதில் கொண்டு தசமியில், மதியம் ஒரு பொழுது உண்டு, விரதம் இருந்து, அடுத்த நாள் ஏகாதசி முழுவதும் பகவான் நாராயணனின் கதைகளைப் படித்தும், ஸ்தோத்திரங்களைப் படித்தும், பஜனைகள் செய்தும், ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களை வாசித்தும், நற்பொழுது போக்க வேண்டும். அதற்கு அடுத்த நாள் காலையில், பகவானுக்கு துளசி மாலையைச் சாற்றி, நறுமணமுள்ள தீர்த்தங்களை வைத்து நிவேதனங்களைப் படைத்து, துவாதசி பாரணையை முடிக்க வேண்டும்.

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி

வாமன அவதாரத்தை ஒட்டி வருகின்ற ஏகாதசிக்கு விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி திதியில்தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார் என்பதால், அவசியம் எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டிய ஏகாதசி விரதம். இந்த விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆடவர்கள், பெண்கள், பிரம்மச்சாரிகள், சம்சாரிகள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம். இதற்கு “பத்ம ஏகாதசி’’ என்றும் ஒரு பெயர் உண்டு. சகல பாவங்களையும், தோஷங்களையும் தூளாக்கும் ஏகாதசி விரதம் இது. ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்கி, விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்குப் படைத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இதற்கு துவாதசி பாரணை என்று பெயர்.

ஆமலகி ஏகாதசி

“ஆம்லா’’ என்றால் நெல்லி என்று பொருள். நெல்லியை பிரதானமான பூஜைப் பொருளாகக் கொண்ட ஏகாதசி ஆமலகி ஏகாதசி. துவாதசி பாரணையில் நெல்லிக்காயைப் பயன்படுத்த வேண்டும். ஏகாதசி பூஜையில் நெல்லி மரத்தை வணங்க வேண்டும் என்பது இந்த ஏகாதசியின் சிறப்பு. இதற்கு என்ன காரணம் என்று சொன்னால், நெல்லிமரம் என்பது மகாலட்சுமியினுடைய அம்சம். நெல்லி மரத்தை நாம் பூஜை செய்வதன் மூலமாக, மகாலட்சுமியின் பேரருள் கிடைக்கும். வறுமை அகலும். சகல ஐஸ்வரியங்களும் பெருகும். இந்த ஏகாதசியில் வழக்கம் போல் உபவாசம் இருந்து, பெருமாளுடைய தோத்திரங்களைப் பாடி, மாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று, நெல்லிக்காய் இருந்தால், மகாலட்சுமியின் படத்தின் முன் வைத்து நிவேதனம் காட்டி, வணங்க வேண்டும். விஷ்ணுசஹஸ்ர நாமத்தையும், மகாலட்சுமி ஸ்தோத்திரங்களையும் சொல்ல வேண்டும்.

சபலா ஏகாதசி

தை மாதத்தில் வருகின்ற வளர்பிறை ஏகாதசிக்கு “சபலா ஏகாதசி” என்று பெயர். இந்த ஏகாதசியில் காலையில் எழுந்து நீராடி, விரதத்திற்குத் தயாராக வேண்டும். ஏகாதசியில் துளசி இலைகளைப் பறிக்கக் கூடாது. ஆதலால், முதல்நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்று முழுவதும் பகவான் நாராயணனை நினைத்து விரதமிருந்து, அடுத்த நாள் காலை துவாதசி பாரணை செய்து, விரதத்தை நிறைவேற்றவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் ஏகாதசி நாளிலும், துவாதசி பாரணை முடிந்த பிறகும் பகலில் உறங்கக் கூடாது. இறைவனுடைய திருநாமத்தைச் சொல்ல வேண்டும். அவருடைய கீர்த்தனங்களை இசையோடு பாட வேண்டும். புராண இதிகாசங்களை வாசிக்க வேண்டும். ஏகாதசி விரதம் இருந்து, துவாதசி அன்று நம்மால் இயன்றளவு தானங்களைச் செய்தால், நம்முடைய பாவங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். சந்ததி வளரும். ஏகாதசி விரதத்தை முறையாக இருக்க முடியாதவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள், ஆரோக்கிய குறைவு உள்ளவர்கள், சர்க்கரை நோய் போன்ற நோயால் அவதிப்படுபவர்கள், லேசான உணவு, பால் பழங்கள் எடுத்துக் கொண்டு உபவாசம் இருக்கலாம். முழு அரிசியை எக்காரணத்தை முன்னிட்டும் உபயோகிக்கக் கூடாது. பின்ன அரிசியில், அதாவது அரிசியை உடைத்து உப்புமா போன்ற பலகாரங்களைச் செய்து லேசாக, கால் வயிற்றுக்குச் சாப்பிடலாம். இதன் மூலம் பகவானுடைய திருவருள் கிடைப்பது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்பது மறைமுகமாக பலன் என்பதை மறந்து விடக் கூடாது.

யோகினி ஏகாதசி

ஆனி மாத தேய்பிறையில் வரும் இந்த ஏகாதசிக்கு “யோகினி ஏகாதசி’’ என்று பெயர். இந்த ஏகாதசியில் விரதமிருந்து பெருமாளை வணங்கினால், எத்தகைய உடல் நோயாக இருந்தாலும் தீர்ந்துவிடும். சகல நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். மனக்குழப்பங்கள் தீரும். உடல் உற்சாகமாக இருக்கும். இதற்கு ஒரு இனிய கதை ஒன்று உள்ளது.அழகாபுரியின் மன்னன் குபேரன். இவர் சிவபக்தன். தவறாமல் சிவபூஜை செய்பவன். குபேரனின் பணியாளன் ஹேமமாலி. குபேரன் செய்யும் சிவபூஜைக்கான மலர்களை பறித்து வந்து கொடுக்கும் பணியைச் செய்து வந்தான். ஒருநாள், வழக்கம்போல மலர் பறிக்கச் சென்றவன், உரிய நேரத்துக்குத் திரும்பவில்லை. நெடுநேரம் காத்திருந்த குபேரன், மலர் இல்லாததால் சிவபூஜை செய்யமுடியாமல் தவித்தான். கடுங்கோபம் கொண்டான். “சிவபூஜை தடைப்படக் காரணமாக இருந்த ஹேமமாலியைத் தொழுநோய் தாக்கட்டும்.’’ என்று சாபமிட்டான். அடுத்த கணம், தொழுநோயால் பீடிக்கப்பட்டான் ஹேமமாலி. உடனே அவன் தன் மனைவியைப் பிரிந்து காடுகளில் சுற்றித்திரியத் தொடங்கினான். ஒருநாள் வனத்தில் அவன் மார்க்கண்டேய முனிவரைக் கண்டான். தனது நோய் காரணமாகத் தொலைவிலிருந்தே அவரை வணங்கினான். அனைத்து உயிர்களிடமும் மாறாத அன்பு செலுத்தும் மார்க் கண்டேய முனிவர், அவன் நிலையைக் கண்டு வருந்தினார். ஹேமமாலிக்கு `யோகினி ஏகாதசி’ விரதத்தின் மகிமையை எடுத்துச் சொல்லி அதைக் கடைப் பிடிக்குமாறு உபதேசித்தார். ஹேமமாலி, யோகினி ஏகாதசி நாளில் விரதமிருந்து தன் நோய் நீங்கப் பெற்றான். இந்த விரதத்தை தொடர்ந்து கடைப் பிடித்து வருபவர்களுக்கு, உடலில் எந்த நோயும் அண்டாமல், நெடுநாள் வாழ அருள் கிடைக்கும். [எ]

580 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.