விழிக்காவிடில் விடிவில்லை
விழிக்காவிடில் விடிவில்லை

அரசதலைவர் தேர்தலில் வழமை போன்று மீண்டும் 13ஐ பேசுபொருளாக்கி தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முயல்கின்றது சிங்கள தேசம். அதற்கு தமிழ்மக்களின் தலைமைக் கட்சி என்று தனக்குத்தானே மகுடம் சூடிக்கொள்ளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் உடந்தையாயிருக்கின்றது.

தேர்தல் காலங்களில் 13ஐ பற்றிப் பேசுவது சிங்களவர்களின் வழமை. 13இல் எதுவும் இல்லை என்பது தமிழர்களைவிட சிங்களவர்களுக்கு நன்றாகத் தெரியும். இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட 13ஐ விரும்பிய நேரத்தில் கொழும்பால் தன் இஷ்டப்படி பிடுங்க முடியும் என்பதும் சிங்களத் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அந்த 13ஐ கூட கொடுப்பதற்கு அவர்களுக்கு மனமில்லை. அது தமிழர்களுக்குத் தேவையில்லாததும் கூட ஆனால் 13ஐ பற்றிய விம்பத்தை கட்டியெழுப்பி, அதன் ஊடாகத் தமிழர்களுக்குத் தீர்வு கிடைத்து விடும் என்ற பிரமையை உருவாக்க நினைக்கும் சிங்கள தேசத்துக்கும் அதன் தலைவர்களுக்கும் காவடி எடுக்கின்ற நிலையில் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இருக்கின்றனர். தங்களை தமிழ் மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு, உண்மையில் இவர்கள் சிங்களத் தேசத்துக்கே சேவகம் செய்கின்றனர்.

13ஆவது திருத்தம் தமிழர்களுக்கு என்றுமே உதவாது. அதை தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்கமுடி யாது. இலங்கையின் ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட எந்தவொரு தீர்வும் தமிழர்களால் தொட்டும் பார்க்க முடியாதவை. இன்றைய சூழலில் 13ஆவது திருத்தத்தை எந்தவொரு சிங்களத் தலைவரும் முழுமையாக நடைமுறைப்படுத்தினால் மறுநாளே மற்றைய தலைவர் அதைப்பிடுங்கி எடுப்பதை எவராலும் தடுக்க முடியாது. அந்தளவு தூரம் பலவீனமான ஒரு தீர்வுத் திட்டம் தான் 13உம் அதனால் உருவான மாகாணசபையும்.

இப்படியிருக்கையில் தற்போது 13பேசு பொருளாக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள கடும் தேசியவாதிகள் அதைக் கடுமையாக எதிர்க்கின்றனர். சிங்கள கடும் தேசியவாதிகள் எதிர்ப்பதால், 13ஆவது திருத்தம் ஏதோ தமிழ் மக்களுக்கு ஆதரவானது என்று காண்பிக்க சிலர் முயல்கின்றனர். இதைத்தான் சிங்களத் தலைவர்கள் விரும்புகின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் தமிழர்களுக்கு எதையும் கொடுக்கக்கூடாது. அதற்காக ஏதாவது குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் எதிர்பார்த்ததைப் போல அது இப்போது நெருப்பாகப் பற்றிக்கொண்டுள்ளது.

சஜித்தோ, அநுரவோ யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சியினரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது 13ஐ பற்றிய பேச்சே எடுக்கப்பட்டாமல் தமிழரசுக் கட்சியினர் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், அவர்களும் 13ஐ தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்று சொல்லி, 13ஐ பற்றி சிங்களத் தலைவர்கள் போட்ட வலையில் தெரிந்தே விழுந்துவிட்டனர்.

எதிர்வரும் அரசதலைவர் தேர்தலில் சிங்களத் தலைவர்கள் 13ஐ பற்றிப் பிடித்துக்கொண்டு தொங்கப் போகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அந்தச் சிங்களத் தலைவர்களை தமிழ் மக்கள் எப்படி ஆதரிக்க முடியும்? ஆனால், வயதில் மாத்திரம் மூத்தவரான சம்பந்தர், இன்னமும் சிங்கள வேட்பாளரை ஆதரிப்பதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றார். அவர் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிலிருந்து சிந்திப்பவரல்லர். தனது தனிப்பட்ட நலனிலிருந்தே விடயங்களை அணுகுகின்றார். அதனால் தான், தமிழ்ப் பொதுவேட்பாளரை எதிர்ப்பதுடன், 13ஐ முன்னிறுத்தும் சிங்களத் தலைவர்களை ஆரத்தழுவவும் முற்படுகின்றார்.

பௌத்த சிங்களப் பேரினவாதம் தனது பரவணிப்பண்பிலிருந்து மாறப்போவதில்லை. அதை அரவணைக்கும் தமிழ்த் தலைவர்களும் திருந்தப்போவதில்லை. தமிழ் மக்கள் தாங்களாக விழித்துக்கொள்ளாவிட்டால் விடிவில்லை!

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

293 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.