குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
ஷானி அபேசேகர, சுகத்மெண்டிஸ் மற்றும் நவரத்தின பிரேமரத்ன ஆகியோர் 2021ஆம் ஆண்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து, ஷானி அபேசேகர தரப்பால் அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் மஹிந்த சமயவர்த்தன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று பரிசீலனைக்கு வந்தது. வழக்காளியின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசாவின் சட்ட நிறுவனத்தின் அனுசரணையில், சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனைக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி சாந்த ஜெயவர்த்தன, சட்டத்தரணி ஓஷதிகனீஷா ஹப்பு ஆராச்சி ஆகியோர் முன்னிலையானார்கள், சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, மூன்று அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணை செய்வதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்குத் தொடர்பில் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.