மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில், ஹர்திக் பாண்டியாவின் போராட்டம் வீண் போன நிலையில், மும்பையை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது.
அதன்படி, நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணிக்கு ஷோல்ட் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும், கோலியும், படிகலும் இணைந்து அணியைப் பலப்படுத்தினார்கள். ஆரம்பத்தில் இருவரும் இருநூறுக்கும் அதிகமாக சராசரியில் விளையாடினார்கள். இணைப்பாட்டமாக 91 ஓட்டங்கள் பகிரப்பட்ட பின்னர் 37 ஓட்டங்களுடன் படிக்கல் ஆட்டமிழந்தார். கோலியும் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
எனினும், அணித்தலைவர் படிதார் மற்றும் ஜிதேஷ்சர்மா இருவரும் கடைசிக் கட்ட அதிரடியைக் கையிலெடுத்தார். படிதார் 32 பந்துகளில் 64 ஓட்டங்களையும், ஜிதேஷ் சர்மா 19 பந்துகளில் 40 ஓட்டங்களையும் பெற்றனர்.
இறுதியில் 5இலக்குகளை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது பெங்களூர். பதிலுக்குக் களமிறங்கிய மும்பை அணியின் இன்னிங்ஸ் ஆரம்பத்தில் பெரும் தடங்கல்களையே எதிர்கொண்டது. ரோகித் சர்மா 17, ரிகில்டன் 17 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வில் ஜக்ஸ் மற்றும் சூரியக் குமார் யாதவ் இருவரும் ஒருநாள் ஆட்டங்களின் பாணியின் விளையாடினார்கள்.
சூரியக்குமார் யாதவ், தான்பெற்ற 28 ஓட்டங்களுக்காக 26 பந்துகளை எதிர்கொண்டதுடன், இது அணிக்குப் பெரும் பின்னடைவைக் கொடுத்தது.
ஒரு கட்டத்தில் 9 பந்துப்பரிமாற்றங்களில் 130 ஓட்டங்களைப் பெற்றால்தான் வெற்றியென்ற நிலை. மும்பை மீண்டுவருவது சாத்தியமில்லை என்று கருதப் பட்டது.
ஆனால், அனைத்தையும் மாற்றினார் பாண்டியா. வந்தவேகத்தில் வேட்டையாடத் தொடங்கினார். திலக் வர்மாவும்; அதிரடியைக் கையிலெடுக்க ஆறு , நான்கு என ஓட்டங்கள் சீறிப் பாய்ந்தன. 15 பந்துகளில் 42 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழந்தார் பாண்டியா. திலக் வர்மாவும் பவிலியனுக்குத் திரும்ப 20 பந்துப்பரிமாற்றங்களின் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 209 ஓட்டங்களையே மும்பையால் பெறமுடிந்த நிலையில்12 ஓட்டங்களால் பெங்களூர் அணி வெற்றிபெற்றுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.