தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் எதிர் தரப்பினரை கைது செய்யலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் வியாழக்கிழமை (16) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைத்து, சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய கிளை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்பதை மக்கள் நன்கு விளங்கிக் கொண்டுள்ளார்கள். தனது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் எதிர் தரப்பினரை கைது செய்யலாம் அரசியல் பழிவாங்கலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே சட்ட ஆலோசனை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவது சாத்தியமற்றது. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சாத்தியமற்றது என்பதை அரசாங்கம் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது, பொருளாதார மீட்சிக்காக அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது என்பதை மக்கள் அறிந்து கொண்டுள்ளார்கள்.
ராஜபக்ஷர்கள் நாட்டின் தேசிய வளங்களைத் தனியார் மயப்படுத்துவதாக மக்கள் விடுதலை முன்னணி பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. தற்போது அவர்கள் தேசிய வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோசத்தை மறந்து விட்டார்கள்.
தேசிய வளங்களை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.