இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான நிலையில் தொடர்ந்து மாலை 4 மணி வரை இடம்பெறும்.
இதன்படி, வாக்காளர்கள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க 1கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் நாடு பூராகவுமுள்ள 13ஆயிரத்து421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை, மாலை வாக்களிப்பு நிறைவடைந்தது குறிப்பிடப்பட்ட 2034 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளதாகவும் நள்ளிரவுக்குள் முதல் தபால்வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தில் 18 பேர், கம்பஹா மாவட்டத்தில் 19, களுத்துறை மாவட்டத்தில் 11, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 5, நுவரெலியா மாவட்டத்தில் 8, காலி மாவட்டத்தில் 9, மாத்தறை மாவட்டத்தில் 7, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7, யாழ். மாவட்டத்தில் 6, வன்னி மாவட்டத்தில் 6, மட்டக்களப்பு மாவட்டத்தில் 5, திகாமடுல்ல மாவட்டத்தில் 7, திருகோணமலை மாவட்டத்தில் 4, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 8, அனுராதபுரம் மாவட்டத்தில் 9, பொலன்னறுவை மாவட்டத்தில் 5, பதுளை மாவட்டத்தில் 9, மொனராகலை மாவட்டத்தில் 6, இரத்தினபுரியில் 11 மற்றும் கேகாலை மாவட்டத்தில் 9 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அதேநேரம் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் 29 போனஸ் ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.