யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆ.குழு தெரிவிப்பு!
(ஆதவன்)
வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசினால் 3 தசாப்தங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப்போரின் ஒரு முக்கியமான குறியீடே முள்ளிவாய்க்கால் கஞ்சி என்று யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் உள்ளதாவது:-
போர் முடிந்து, சரணடைவுகளின் பின் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்தவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து 70 ஆயிரமாக இருந்தது. இவர்கள் இராணுவக் கட்டுப்பட்டுக்குள் வரும் வரை தமது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வர உதவியது அந்த மக்கள் தம் உடைமைகளில் வைத்திருந்த அரிசி, தேங்காய் போன்றவற்றைப் பகிர்ந்து காய்ச்சிய கஞ்சிதான். இதனால்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சி இவர்களது உயிர் காத்த கஞ்சியாகவும் வரலாற்றுச் சிறப்புப் பெறுகின்றது. இலங்கை வாழ் தமிழர்களின் குறிப்பாக வடக்கு - கிழக்கில் வாழும் தமிழர்கள் எதிர்கொண்ட மிகவும் மோசமான துன்பங்களையும் இலட்சக்கணக்கான மக்கள் காவு கொள்ளப்பட்டமையையும் நினைவுகூருவது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்றம்.
உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். தற்போது பல்வேறு இடங்களில் இடம்பெற்று வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சிப்பரிமாற்ற நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் தடுக்க முயல்வது குறிப்பாக கிழக்கில் சம்பூர் பகுதியில் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்தவர்கள் இரவிரவாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருப்பது மிக மோசமான மனித உரிமை மீறலாகும்.பன்னாட்டு மன்னிப்புச்சபை இலங்கை யில் இடம் பெற்றுவரும் சிறுபான்மையினருக்கெதிரான மனித உரிமை மீறல்களை தொடக்கத்திலிருந்தே சுட்டிக்காட்டி வருவது நாமறிந்ததே. இவ்வாறிருக்கையில் மன்னிப்புச்சபையின் செயலாளர் அக்னஸ் கலமார்ட் இலங்கைக்கு வந்து குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் பங்கெடுப் பதை நாம் வரவேற்கின்றோம் - என்றுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.