128 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி மீண்டும் இடம்பெறவுள்ளது.
2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஆண்கள் மற்றும் பெண்கள் தலா ஆறு அணிகள் ஒலிம்பிக் கிரிக்கெட்டில் போட்டியிடும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.
இந்தப் போட்டிகள் ரி-20 வடிவத்தில் நடத்தப்படும் எனவும் ஒரு அணியில் அதிகபட்சம் 15 வீரர்கள் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தகுதி அளவுகோல்கள் இறுதி செய்யப்படவில்லை. போட்டியை நடத்தும் அமெரிக்கா நேரடியாக தகுதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட்டுடன் கூடுதலாக, ஸ்குவாஷ், ஃபிளாக் கால்பந்து, பேஸ்பால்/சாப்ட்பால் மற்றும் லாக்ரோஸ் ஆகியவையும் 2028 ஒலிம்பிக்கில் புதிய விளையாட்டுகளாக இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றது. இதன் பின்னர், 1998 ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது.
இதேபோல் கடந்த 2010, 2014 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ரி-20 வடிவத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
உலகளவில் கிரிக்கெட்டின் புகழ் அதிகரித்துள்ளதால், ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்த முயற்சிகளுக்கு இன்று சர்வதேச ஒலிம்பிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
2023 ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் பதினான்கு ஆண்கள் அணிகளும், ஒன்பது பெண்கள் அணிகளும் போட்டியிட்டன. இரண்டு பிரிவுகளிலும் இந்தியா தங்கம் வென்றிருந்தது.
இதற்கிடையில், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 321 போட்டிகள் இடம்பெறும் எனவும் கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கை விட 22 போட்டிகள் கூடுதலாக நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.