13ஆவது திருத்தச்சட்டத்தில் நாம் கைவைக்கமாட்டோம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளமையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளதுடன் இக்கூற்றின் மூலம் வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படமாட்டாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது,
இனப்பிரச்சினைக்கு தீர்வான 13ந்திருத்த சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தும் என இந்தியாவின் தமிழ் நாட்டில் வைத்து பகிரங்கமாக சொன்ன துணிச்சலுக்காக அமைச்சர் சந்திரசேகரை நாம் பாராட்டுகின்றோம்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக கொண்டு வரப்பட்டதே 13வது திருத்தச்சட்டமாகும். இச்சட்டத்தின்படி வடக்கும் கிழக்கும் ஒரு வருடத்துக்கு தற்காலிகமாக இணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
ஒப்பந்தப்படி தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கும் கிழக்கும் ஒரு வருடத்தில் பிரிந்து மீண்டும் இணைய வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். மாகாண சபை முறைக்கு விடுதலைப்புலிகளின் எதிர்ப்பால் சபை கலைக்கப்பட்டது.
அதன் பின் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கு முழு ஒத்துழைப்பும் வழங்கிய ஜேவிபி, மஹிந்த காலத்தில் நீதி மன்ற வழக்கின் மூலம் வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக பிரிக்கப்பட்டு இரு மாகாணங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்தப்பட்டது.
பின்னர் கடந்த நல்லாட்சிக்காலத்தில் ரணில், சுமந்திரன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்றோர் மாகாண சபை தேர்தலை இல்லாதொழிப்பதற்காக புதிய தொகுதிவாரி தேர்தல் முறையை நாடாளுமன்றத்தில்ப்சட்டமாக்கியதால் இன்று வரை மாகாண சபை தேர்தல் நடக்கவில்லை.
எம்மைப்பொறுத்தவரை மாகாண சபை முறைமை என்பது எந்த பிரயோசனமும் இல்லாத, அரசுக்கும் வீண் செலவை உருவாக்கி, தமிழ் மக்களையும் முஸ்லிம்களையும் மோதவிடும் முறையாகும்.
ஆனாலும் இந்தியாவை நமது நாடு பகைக்க முடியாது என்ற பூகோள அரசியலின் யதார்த்தத்துக்கிணங்க வடக்கும் கிழக்கும் மீண்டும் இணையாத வகையில் 13 வது திருத்த சட்டப்படி மாகாண சபைத்தேர்தலை தேசிய மக்கள் சக்தி அரசு மேற்கொள்ளும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.