2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இன்று (30) ஆரம்பமாகின.
மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இன்று தமது தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த தவறியவர்கள், நவம்பர் 4 ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள உரிய அலுவலகங்கள் அவகாசம் வழங்கியுள்ளன.
மேலும், முப்படை முகாம்கள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் மாதம் முதலாம் திகதி மற்றும் நவம்பர் 4ஆம் திகதிகளில் அடையாளப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய நாட்களில் தபால் வாக்களிக்க முடியாத தபால் வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால் வாக்கினை அடையாளப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட தபால் வாக்கு கையிருப்பு பொதிகளை இன்று முதல் பெற்றுக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வருட பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஏறக்குறைய ஆயிரம் அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.